மத்திய மாகாண கண்டி மாவட்ட பிரதேச சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தில் கணணி தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி 50 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.
03.01.2022 அன்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த நிதி மோசடியை அவர் மேலும் வலுவாக
உறுதிப்படுத்தினார்.
வலப்பனை கல்வி காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்ற நிலையில் இன்னும் ஒரு அதிர்ச்சியான சம்பவமாக மத்திய மாகாண கண்டி மாவட்ட பிரதேச சுகாதார
பணிப்பாளர் காரியாலயத்தில் 50 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் குறித்த மோசடியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 3 பேர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவிக்கின்றார்.
இந்த நிதி மோசடியில் கணவன் மனைவி மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவருமே சந்தேகத்தின் பேரில்
இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நீதிமன்றத்தின் மூலமாக விசேட காரணத்திற்காக பிணையில்
செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.ஏனைய இருவரும் சிறையில் வைக்கப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்படுவதாகவும் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பி.எச்.என்.ஜயவிக்ரம மேலும்
தெரிவிக்கின்றார்.
இந்த நிதி மோசடியானது கணணி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இடம்பெற்றுள்ளமையும் உறுதியாகின்றது. முன் அறிவித்தல்கள் எதுவுமின்றி வெளியாரின் பெயர்களை பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.அதாவது, அந்த நபர்களின் பெயர்களை கணணி மயப்படுத்தியே இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாகாணமொன்றில் சுகாதார அமைச்சின் வகிபாகம் மிகவும் காத்திரமானது. இந்த அமைச்சின் கீழாகவே
வைத்தியர்கள் உட்பட பலர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கான ஊதியமும் மாகாண நிதி கட்டமைப்புக்கள்
ஊடாகவே நடை பெறுகின்றன.
மத்திய மாகாணத்தில் எங்களுடைய மத்திய மாகாணத்தை பொறுத்தவரையில் 178 வைத்தியசாலைகளும் 49 சுகாதார வைத்திய சேவைகள் திணைக்களமும் இருக்கின்றது. இதில் 675 வைத்தியர்களும் 6456 சுகாதார சேவையை சேர்ந்த ஏனைய பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.என்ற தகவலை மத்திய மாகாண சுகாதார துறை பணிப்பாளர் டாக்டர்.நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.
அவ்வாறிருக்க அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைப் பயன்படுத்தியே மேற்படி மோசடி நடைபெற்றுள்ளது. சுகாதார அமை ச்சின் கீழ் பணியாற்றும் வைத்தியர்கள் முதல் ஏனைய உழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவும் வேறுவேறானவை . குறிப்பாக விசேட வைத்திய நிபுணர்களுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக கொடுப்பனவு என்பது மிகவும் அதிகமானதாகவும் சாதாரண சுகாதார தொண்டர் உழியர் ஒருவருக்கு வழங்கும் கொடுப்பனவு குறைவாகவும் காணப்படுகின்றன. இந்நிலையில் தான், மேலதிக கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்த நிதி மோசடி தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் மாகாண சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டு அந்த நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகதில் 3 பேரை உடனடியாக பணி இடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது பற்றிக் குறிப்பிட்ட மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே, ‘நிதிமோசடி சம்பந்தமான விடயத்தில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுடையது அல்ல. அதனை பொலிசாரும் குற்ற விசாரணை பிரிவுமே மேற்கொள்ள வேண்டும். குற்ற விசாரணை பிரிவினர் மிகவும் விரைவாக செயற்பட்டு குறித்த கணணிகளை அவர்களுடைய பாதுகாப்பின் கீழ் கொண்டு சென்றனர். இதற்கு அப்பால் எங்களுடைய செயற்பாடு இல்லை .நாங்கள் தேவையான முக்கிய விடயங்களை மேற்கொண்டிருக்கின்றோம். இனி சட்ட ரீதியாகவே இதனை அனுக வேண்டும்.
இது தொடர்பாக சட்டத்தரணிகளிடம் கருத்துக்களை கெட்ட பொழுது இவ்வாறான நிதி மோசடிகள் இடம்பெறுகின்ற பொழுது அரசாங்க பொது சொத்துக்கள் சட்டத்தின் ஊடாக வழக்கு தொடரப்படுகின்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்களுக்கு விசேட காரணங்கள் இன்றி பினையில் செல்வதற்கு கூட நீதிமன்றம் அனுமதி வழங்காது.மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவர்களுக்கு தேவையான அனைத்து தரப்பினரிடமும் அறிக்கைகளை பெற்றுக்கொண்டு சட்டமா அதிபர் ஊடாக சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கதாக்கல் செய்து தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் இருக்கின்றது.
அரசாங்கத்தின் நிதி மோசடி என்பது ஒரு பாரிய குற்றமாகவே கருதப்படுகின்றது. அதற்கு காரணம் அரசாங்கத்தின் பணம் என்பது பொது மக்களின் பணம்.எனவே அதனை மோசடி செய்வது என்பது பாரிய குற்றமாக கருதப்படுகின்றது.
அத்துடன் ‘இந்த நிதி மோசடிகள் தொடர்பாக மாகாண கணக்காய்வு திணைக்களமும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் கணக்காய்வுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.பல நிதி மோசடிகளுக்கு முக்கிய காரணமே முறையான கணக்காய்வை வருடா வருடம் மேற்கொள்ளாமையே .என்பதே தன்னுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கின்றது என சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறான நிதி மோசடிகளை எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் என ஆளநரிடம் வினவிய பொழுது அதற்கு அவர்
இவ்வாறான நிதிமோசடிகளை தவிர்க்க வேண்டுமாக இருந்தால் கட்டாயமாக 5 வருட இடமாற்றத்தை அமுல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் நிதி மோசடிகளை தவிர்க்க முடியும் என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார். நாங்கள் இடமாற்றத்தை மேற்கொள்ள முயற்சி செய்தால் அதற்கு பல வகையிலும் அரசியல் தலையீடு இருக்கின்றது.
இதன் காரணமாக இடமாற்றத்தை செய்ய முடியாத ஒரு நிலைமை இருக்கின்றது. இடமாற்றங்களை மேற்கொள்கின்ற பொழுது ஒரு புறம் அரசியல் அலுத்தம்.மறுபுறம் குறித்த இடமாற்றத்தை பெறுகின்ற நபர்கள் தனக்கு ஏதாவது ஒரு நோய் இருக்கின்றது எனக்கு வேறு இடத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றால் அந்த காலநிலை தனக்கு ஒத்துவராது என்ற காரணத்தையும் வைத்திய அறிக்கைகளையும் கொண்டு வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டையும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே முன்வைக்கின்றார்.
முன்னாள் மத்திய மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் பந்துல யாலே கமவிடம் இது தொடர்பில் வினவிய பொழுது இந்த நிதி மோசடியானது எங்களுடைய காலத்தில் இடம்பெறவில்லை .நான் சுகதார அமைச்சராக இருந்த பொழுது நாங்கள் ஊழல் அற்ற மக்கள் நலன் சார்ந் ஒரு உண்ணத சேவையாகவே சுகாதார சேவையை முன்னெடுத்தோம். ஆனால் ஊழலில் ஈடுபட்டிருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நிதி மோசடி தொடர்பாக மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன உள்ளக விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார். அவர்களின் விசாரணைகளும் தற்பொழுது நடை பெற்று வருகின்றது. இது தவிர தற்பொழுது குற்றப்புலனாய்வு பிரிவினர் பல நபர்களிடமும் தனித்தனியே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களிடமும் இதுவரை விசாரணைகள் நடைபெறவில்லை. அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அந்த அறிக்கையும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவினரே இந்த நிதி மோசடி தொடர்பாக முழுமையான சட்ட ரீதியான விசாரணைகளை முன்னெடுக்கின்ற தரப்பினர்.அவர்களின் விசாரணைகளை அடிப்படையாக கொண்டே இந்த நிதி மோசடி தொடர்பான வழக்கை அவர்கள் முன்னெடுப்பார்கள். இந்த அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் மேலும் அரச நிதிச்சட்டத்தின் அடிப்படையிலான ஒரு விசாரணையும் கண்டி மாவட்ட பிரதேச சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும். என்ற விடயத்தையும் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, இந்த நிதி மோசடி மட்டுமல்ல மத்திய மாகாணத்தின கீழ் இயங்குகின்ற பல நிறுவனங்களின் நிதி மோசடிக்கு காரணமே அந்த நிறுவனங்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கணக்காய்வு செய்யப்படாமல் இருப்பதே. தற்பொழுது நான் அனைத்து மத்திய மாகாண சபைக்கு கீழ் இயங்குகின்ற நிறுவனங்களையும்
கணக்காய்விற்கு உட்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளேன்.
இது தொடர்பாக மிகவும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டிருக்கின்றேன்.எனவே எதிர்காலத்தில் அனைத்து நிறுவனங்களையும் ஒவ்வொரு வருடமும் கணக்காய்விற்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளேன்.
விசேடமாக சுகாதாரம் கல்வி விடயங்களுக்கு பொறுப்பான திணைக்களங்கள் கணக்காய்வு செய்யப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என தன்னுடைய தரப்பில் தெரிவித்துள்ளார். கணக்காய்வை மேற்கொண்டால் பல நிதி மோசடிகளை தடுக்கவும் அறிந்து கொள்ளவும் முடியும் என்பதே மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.
– நுவரெலியா எஸ்.தியாகு
Leave a comment