பா.சதீஸ்
நகரசபையானது மக்களுடன் மிகநெருங்கியதொரு அதிகார கட்டமைப்பாக உள்ளது. இதனால், நகரசபைக்கென சில கடமைகளும், அதிகாரங்களும் இருக்கின்றன. அதன்படியே நகரசபை தொழிற்படுவது இன்றியமையாததாகும்.
அந்தவகையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்டத்தின் பிரகாரம் நகரசபையானது தனது எல்லைக்குட்பட்ட பூங்காக்கள், திறந்த வெளிகள் ,தோட்டங்கள், கால்வாய்கள், பொதுச்சந்தைகள், பொதுக்கட்டிடங்கள் என்பனவே நகரசபைக்கு சொந்தமானதாகும்.
அந்தவகையில் நகரசபையின் அதிகாரத்தின் கீழ்வருகின்ற தெருக்கள், ஒழுங்கைகள் முதலியவற்றை துப்பரவு செய்து பேணுதல், திட்டமிடல், தெருக்களை அகலமாக்கல், திறந்த வெளிகளுக்கு இடங்களை ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் நகரின் வளர்ச்சியை உருவாக்குதல் பொது வசதிகளை நிறுவி பேணுதல், பொதுச்சுகாதாரத்தை ஊக்குவித்தல் மற்றும் அதற்கான வசதியை மேம்படுத்தல் என்பனவற்றை கடமைகளாக கொண்டிருக்கின்றன.
அத்துடன், தமது கடமைகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதும் சட்டத்தின் பிரகாரம் அவசியமாகும். அந்தவகையில் பொதுச்சேவைகளை நகர ரீதியில் மேற்கொள்வதற்கு அனைத்து கொள்முதல்களின் மூலதனமாக பயன்படுத்தும் நிதி ஒதுக்கீடு பற்றியும், குறித்த நகருக்குள் நகரின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பான செயற்பாடுகள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டு வெளிவருகின்றது.
அதற்கேற்ப ஒவ்வொரு வேலைத்திட்டங்களையும் ஒதுக்கப்பட்ட நிதிக்கேற்ப ஒப்பந்தகாரர்களிடம் வழங்கி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், அதனை சரிவர செய்து முடிக்கும் கடமையும் நகரசபையினதும், தொழில்நுட்ப அதிகாரிகளினதும் கடமையாகும்.
2021ஆம் ஆண்டு வவுனியா நகரசபையின் வரவு, செலவுத்திட்டத்தின் அடிப்படையில் வவுனியா நகரத்திற்கென முக்கிய வேலைத்திட்டங்கள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அவ்வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்ட ஒப்பந்தகாரர்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முழுமையாக பூர்த்தியாக்கப்படவில்லை.
வவுனியா நகரசபையின் குறித்த ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் 54 வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 9 தொகுதிக்கான 24 வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்ட ஒப்பந்த காலத்தினை கடந்தும் இதுவரை பூர்தியாக்கப்படவில்லை.
ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட்ட வேலைத்திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடையாமைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் நகரசபையின் ஆளும் தரப்பிற்கும், அதிகாரிகளுக்கும் காணப்படுகின்றபோதும் இதுவரையில் மேற்படி பூர்த்தியாகாத வேலைத்திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
பொறுப்பற்றதன்மை
9 தொகுதிகளுக்காக ஒப்பந்தக்காரர்களிடத்தில் வழங்கப்பட்ட 54வேலைத்திட்டங்களில் 30 வேலைத்திட்டங்களை ஒப்பந்தகாரர்கள் பூர்த்தியாக்கியுள்ள போதும் ஏனைய 24வேலைத்திட்டங்களை இதுவரை நிவர்த்தி செய்யாமைக்கான காரணம் என்னவென்பது குறித்து, நகரசபையின் ஆளும் தரப்பினரிடத்தில் கேட்டபோது ‘நாட்டில் ஏற்பட்ட சடுதியான விலை அதிகரிப்பே காரணம்’ என்று ஒற்றை வசனத்தில் பதிலளித்தார்கள்.
ஆனால், கேள்விமனுக்கோரப்பட்டு, ஒப்பந்தக்காரர்களிடத்தில் குறித்த ஒப்பந்தங்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் ஒரே காலப்பகுதியிலேயே ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட்டும் உள்ளன.
ஆகவே ஏனைய நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு சமாந்தரமாக தற்போது நிறைவடையாத நிலையில் இருக்கும் செயற்றிட்டங்களுக்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் உரிய கொள்வனவுகளை செய்திருந்தால் இவ்விதமான நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்டிருக்காது.
ஆனால் ஒப்பந்தக்காரர்கள் அவ்விதமாக செயற்படவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அதனால் தான் தற்போது 24 வேலைத்திட்டங்கள் மட்டும் குறிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்படாது தேக்கத்தில் உள்ளன. தற்போதைய நிலையில் அத்திட்டங்கள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு எப்போது நிறைவடையும் என்பது பற்றிய தெளிவற்ற தன்மையும் நீடிக்கின்றது. அதற்கான பதில்களும் நகரசபையால் வழங்கப்படவில்லை.
குறித்த வேலைத்திட்டங்களில் முதியோர் முற்ற வீதி நகரசபை விடுதி கிரவலிட்டு தாரிடல், கல்லிட்டு தாரிடல் வீதி வேலை திருநாவற்குளம் 4ம் ஒழுங்கை, குருமன்காடு கிராம அபிவிருத்தி சங்க பின்வீதி கிரவலிட்டு தாரிடல், குருமன்காடு முதியோர் முற்றம் புனரமைத்தல், 60 ஏக்கர் ரகுபாக்கம் உள்ளக வீதி கல்லிட்டு தாரிடல், கிரவலிட்டு தாரிடல் வேலை பட்டாணிச்சூர் உள்ளக வீதி, கொங்கிறீட் வீதி வேலை குடா வீதி பட்டானிச்சூர், கொங்கிறிட் வீதி வேலை புகையிரதநிலைய வீதி 6ம் ஒழுங்கை , தேக்கம் தோட்டம் மைதான வீதிவேலை ,கல்லிட்டு தாரிடல் வீதி வேலை, மூன்று முறிப்பு டிப்போ பின்புறவீதி, பண்டாரிக்குளம் 4ம் ஒழங்கை கல்லிட்டு தாரிடல், நாவலர் வீதி கல்லிட்டு தாரிடல், கல்லிட்டு தாரிடல் வீதி வேலை, அம்மன் கோவில் ஒழுங்கை சகாயமாதாபுரம் ஆகியவை மிகவும் முக்கியமானவையாகின்றன.
அது ஒருபுறமிருக்க ஒப்பந்தகாரருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட வேலைத்திட்டங்கள் சரியாக நடைபெறுகின்றதா என்று மேற்பார்வை செய்வது நகரசபையினரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். குறிப்பாக இந்தப் பணியை முன்னெடுப்பவர்கள் நகரசபையின் ஆளும் தரப்பினரும், தொழிநுட்ப பிரிவினரும் தான்.
எனினும் இவர்களால் உரிய மேற்பார்வை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இத்தகைய பின்னடைவுகளை தவிர்த்திருக்க முடியும். ஆகவே நகரசபையினரினதும், தொழிநுட்ப பிரிவினரினதும் இந்த விடயத்தில் பொறுப்பற்று செயற்பட்டிருக்கின்றமையும் வெளிப்படையானது.
இவ்வாறான நிலையில், பூர்த்தியாக்கப்படாத வேலைத்திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தகார்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டபோது, ‘குறித்த ஒப்பந்தகாரருக்கு வேலைத்திட்டங்களை விரைவாக முடித்து தருமாறு கடிதம் மூலம் அறிவித்துள்ளோம் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
மாறாக மேற்பார்வை நடவடிக்கைகளின் போது குறித்த திட்டங்கள் பூர்த்தியாக்கப்படாமை சம்பந்தமாக ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்பது தொடர்பில் வினவியபோது, அதற்கான பதிலளிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம், ஒப்பந்தக்காரர்களை வழிநடத்த வேண்டிய கடப்பாட்டை நகரசபையினரும், தொழில்நுட்ப பிரிவினரும் முறையாக செய்திருக்கவில்லை. இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளும், பதிலளிப்பதை தவிர்ப்பதும் உரிய தரப்பினரின் அசமந்தத்தினையே வெளிபடுத்துவதாக உள்ளது.
இந்நிலையில், ஒப்பந்தகாரர்களிடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக வினவியபோது, விலையேற்றம் காரணமாக நகரசபையினருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நகரசபையினர் எமக்கு மறு பதில் எதுவும் தரவில்லை. ஆனாலும் நாங்கள் சில பொருட்களை முன்னரே கொள்வனவு செய்து வைத்திருப்பதால் அதனை வைத்து ஆரம்ப வேலை தொடங்கி இருக்கின்றோம். இன்னும் முழுமையான வேலை முடிக்கப்படவில்லை என தெரிவித்தார்கள்.
இவ்வாறான நிலையில் மக்கள் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் இத்தகைய செயற்றிட்டங்கள் தாமதமாகுவதற்கு இப்போது பொறுப்புக்கூற வேண்டியவர்கள் நகரசபை தொழில்நுட்ப பிரிவினரையும், தொழில்நுட்ப பிரிவினர் நகரசபையும் பரஸ்பரம் குற்றம் சாட்டி கொண்டிருக்கின்றார்கள்.
மக்களின் பணத்திலே ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் உரிய காலங்களில் முடிக்கப்பட்டாமையினால் பாதிப்படைவது நகரசபையினரோ, அரச அதிகாரிகளோ அல்ல சாதாரண பொதுமக்கள் தான்.
குறிப்பாக, வவுனியா நகரசபையின் கீழ் உள்ள பூர்த்தியாகப்படாத வேலைத்திட்டங்களில் அதிகமாக காணப்படுவது வீதிகளாகும். இதனால் போக்குவரத்தில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அதிகம் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
நகரசபையினரின் வரவு செலவுத்திட்டத்தில் நகரின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இதுவரை முழுமையாக முடிக்கப்படவில்லை. இதனால் அசௌகரியங்களுக்கு பொதுமக்கள் முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த நகரசபை அதிகாரிகள் தமக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை மறந்து தம் காலத்தை வீணடிப்பது மட்டுமன்றி அரச நிதியையும் துஸ்பிரயோகப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இவ் அதிகாரிகள் தம் பொறுப்பற்ற செயற்பாடுகளையும், தவறுகளையும் உணர்ந்து மக்களுக்காக உரிய காலத்திற்குள் வழங்கப்பட்ட வேலைத்திட்டங்களை முடிக்க வேண்டும் என்பதனை கவனத்தில் கொண்டு செயற்படுவது அவர்களின் தலையாய கடமையாகும்.
Leave a comment