அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பானது எல்லா பிரஜைகளுக்கும் தீர்மானமெடுத்தல் செயன்முறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பினை சமமாக வழங்க வேண்டும். அவ்வாறெனில் வினைத்திறன் மிக்க உள்ளுராட்சி அமைப்பு முறையொன்றினை ஏற்படுத்த முடியாது. கீழ்மட்ட தீர்மானமெடுக்கும் செயன்முறையானது ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினர் அல்லது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு இருக்குமாயின் அரசியல் அதிகார பன்முகப்படுத்தல் அனைத்து பிரஜைகளினதும் நல்வாழ்வை உறுதிசெய்யும் தன்மையை இழந்துவிடும்.
உண்மையான அதிகாரப் பன்முகப்படுத்தலானது எல்லா சமூகப் பிரிவினருக்கும் மற்றும் நலன்பேண் குழுக்களுக்கும் அபிவிருத்தி தொடர்பான தீர்மானமெடுத்தல் செயன்முறையில் எத்தகைய பாகுபாடுகளுமின்றி சமமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதாக அமைய வேண்டும். அதன் மூலமே எல்லா சமூக பிரிவினரும் தமது அபிவிருத்திகளையும் அபிலாசைகளையும் அடைந்துக் கொள்ள முடியும்.
உள்ளுராட்சி அரசாங்க முறையென்பது மக்கள் மைய அரசாங்க முறையாக அடையாளம் காணப்படுகின்றது. அதாவது அதன் மையமாக மக்கள் காணப்படல் வேண்டுமென்றும், வேறுபட்ட பல்லினத்தன்மை கொண்ட மக்கள் குழுக்களை உள்வாங்கும் ஆட்சி கட்டமைப்பை கொண்டு காணப்படல் வேண்டுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமயமாதலின் கீழ் அதிகாரப் பன்முகப்படுத்தல் மற்றும் உள்ளுராட்சி அரசாங்கமுறை என்பது வேறுபட்ட பண்புகளை வேறுபட்ட தேவைகளை கொண்ட உள்ளுர்மட்ட மக்களுக்கு அவசியமான அபிவிருத்தி திட்டங்கள் தீட்டி அதனை அவர்களின் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்தி அவர்களை சக்திப்படுத்தி அதனூடாக உள்ளுர் பிரஜைகளை சக்திப்படுத்தப்பட்ட மற்றும் இயலுமைக் கொண்டவர்களாக மாற்றும் பொறிமுறையுடன் கூடிய ஆட்சியாக உள்ளுர் அதிகார சபைகளின் ஆட்சி அமைய வேண்டியது கட்டாயமாகும்.
இந்த செயற்பாட்டில் மலையக மக்கள் மிகவும் தாமதமாகவே உள்நுழைந்தனர். அதிலும் இன்னும் முழுமையாக அவர்கள் இந்த செயற்பாட்டினுள் உள்வாங்கப்படவில்லை. மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நகர்வுகளில் ஏற்படுத்தப்பட்ட தாமதம் இதற்கு பிரதான காரணமாகும்.
அந்தவகையில் புதிய உள்ளுராட்சி திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய பிரதேச சபைகள் மலையகத்தின் அபிவிருத்திக்கு மிகப்பெரிய அடைவுகளாகும். அந்தவகையில் பெருந்தோட்டங்களை மையப்படுத்தி புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச சபைகளில் மஸ்கெலிய பிரதேச சபையும் ஒன்றாகும். இது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சபையாதலால் நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் ஆரம்பத்தில் ஏற்பட்டன. எனினும் உள்ளுராட்சி சபைகளுடன் மக்கள் பங்கேற்பதனூடாக உள்ளுராட்சி அரசாங்க முறைமை வலுப்பெறும் முதன்மை மஸ்கெலிய பிரதேச சபையிலும் காணப்பட்டது.
இதுவரை உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்காமலிருப்பினும் இந்த புதிய பிரதேச சபைகளினூடாக மலையக மக்கள் அதிகமான சேவைகளை அணுகும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. அதேபோல் இத்தகைய பங்கேற்பு ஆட்சிக்கான செயற்பாட்டில் பிரதேச மக்கள் கணிசமான அளவு பங்குபற்றியிருப்பதை அறிய முடிகின்றது. குறிப்பாக மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட பெருந்தோட்டங்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்திச்செய்யப்படாத பிரதேசங்களாகும்.
அந்தவகையில் மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமானது பல்வேறு அடிப்படை வசதிகள் பூர்த்திச் செய்யப்படாத நிலையிலுள்ளது. பொதுவாகவே பெருந்தோட்டப் பிரதேசங்களில் பொதுச் சேவைகள் முறையாக இடம்பெறுவதில்லை. மக்களும் இது தொடர்பாக கரிசனை கொள்வதில்லை. பொதுவாக நகர்ப்புறங்களை அண்டிய பிரதேசங்களில் மட்டுமே பெரும்பாலான சேவைகள் முன்னெடுக்கப்படும். அந்த நிலை அன்று வரை அனைத்து பிரதேசங்களிலும் காணப்படுகின்றது. இருப்பினும் மஸ்கெலிய பிரதேச சபையானது பெருந்தோட்ட பின்னணியை கொண்ட உறுப்பினர்களை கொண்டதாகையால் பெருந்தோட்ட பிரதேசங்களுக்கும் அதன் சேவைகளை விஸ்தரிக்க முயற்சி செய்கின்றனர்.
அதில் முக்கியமானது பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு வீதி விளக்குகள் பொருத்தியமையாகும். மலையகத்தில் இதுவரை எங்கும் தோட்டங்களுக்கு வீதி விளக்குகள் அமைத்ததில்லை. தோட்டங்களின் வீதிகளை தோட்ட முகாமைத்துவமே பராமரிப்பு செய்யும். அமைச்சுகளுக்கு ஊடாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக பகிரப்படும் சேவைகளில் தோட்டங்களின் வீதிகளுக்கு கொன்கிறீட் இடும் நடைமுறையே இன்றும் காணப்படுகின்றது. எனினும் அவ்வாறு அமைக்கப்படும் வீதிகளை பிரதேச சபைகள் பராமரிப்பதில்லை. அதற்கு சட்ட சிக்கல் காணப்படுகின்றது.
எனினும் மஸ்கெலிய பிரதெச சபையானது விசேடமாக தோட்ட மக்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு சபையின் அனுமதியின் மூலம் தோட்டங்களுக்கும் வீதி விளக்குகளை அமைத்துள்ளது. உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட நிதியின் மூலம் இந்த வேலைத்திட்டம் மலையக தோட்டங்களில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பிரதேச பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் பாதீட்டில் உள்ளடக்கியுள்ளனர்.
1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை கட்டளை சட்டத்தின் 171 மற்றும் 173 ஆம் பிரிவுகள் மற்றும் 184 ஆம் பிரிவில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிதி மற்றும் நிர்வாக விதிகளுக்கு அமைவாக மஸ்கெலிய பிரதேச சபையின் பாதீடு ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகின்றது. அதெபோல் “பொது மக்களுடன் கலந்தாலோசித்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகள், பிரேரணைகள் தற்போதைய நிதி நிலைமைக்கு அமைவாக காணப்படும் நிதிக்கு சீராக முகாமைப்படுத்தப்பட்டு கருத்திட்டங்களின் முன்னுரிமையின் படி இப்பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது.” என்று வருடாந்த வரவு செலவு அறிக்கையில் செயலாளரினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஸ்கெலிய பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு 23 தோட்டங்களும், 79 பிரிவுகளும் உள்ளன. ஆனாலும் இது ஒரு புதிய பிரதேச சபையாதலின் காரணமாக பிரதேச சபையின் வருமானம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. உதாரணமாக மஸ்கெலிய பிரதேச சபையின் 2022 ஆம் வருடத்துக்கான மூலதன வருமானமாக ரூ. 206 059 546. 60 எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதேவேளை வருடத்தின் மொத்த செலவீனமாக 206 050 289.71 எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதில் எவ்வித வருமானமும் தோட்ட பகுதிகளில் இருந்து நேரடியாக கிடைப்பதில்லை. எனவே மஸ்கெலிய நகரிலும் சாமிமலை, நல்லதண்ணீ ஆகிய துணை நகரங்களிலும் இருந்து கிடைக்கும் வருமானத்திலேயே தோட்டங்களுக்கும் பிரதேச சபையால் சேவைகளை விஸ்தரிக்க வேண்டியுள்ளது.
பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டத்தில் வருடாந்த மானியமாக ரூ. 50 041 ,073.00 எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்தத் தொகை கூடிக்குறைய கூடிய வாய்ப்பு உள்ளது. எனினும் இதன் மூலம் மக்களின் பிரதான கோரிக்கைகளை பூர்த்திச் செய்வது ஒரு சவாலான விடயமேயாகும். தோட்டங்களில் இருந்து பிரதேச சபைக்கு எழுத்துமூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் அதிகமான கோரிக்கைகளை சமீபகாலமாக கிடைக்கப்பெறுவதாக சபையின் செயலாளர் ராஜவீரன் கூறினார். அவற்றை மையப்படுத்தி வரவுசெலவு அறிக்கைகளை தயாரிப்பதற்கு முயற்சிப்பதாக கூறினார்.
மேலும் மஸ்கெலிய பிரதேச சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் (தவிசாளர் உட்பட) பெருந்தோட்ட பின்னணியைக் கொண்டவர்களாவர். எனவே தோட்ட மக்களின் வாக்குகளின் மூலம் தெரிவுச் செய்யப்பட்ட இவர்களுக்கு பெருந்தோட்ட மக்கள் அதிகமான கோரிக்கைகளை முன்வைத்து சேவைகளை எதிர்ப்பார்ப்பது வழக்கம். அவர்கள் உறுப்பினர்களுக்கு ஊடாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். எனினும் அவை அனைத்தையும் பாதீட்டில் உள்ளடக்குவதற்கு போதுமான நிதி வருமானம் சபைக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இப்பிரதேச சபையில் ஒரு பாரிய சவாலாக உள்ளது.
அதேபோல் வரவுசெலவு திட்ட பிரேரணைகளின் போது மறே 320 ர் பிரிவைச் சேர்ந்த சிவன் நற்பணி மன்றம் சபைக்கு வழங்கிய கோரிக்கைகளில் மறே தோட்டத்திற்கு வீதி விளக்குகள் பொருத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கான செலவீனமாக ரூ. 400 000. 00 அந்த மன்றம் கணிப்பிட்டுள்ளது. இந்த கோரிக்கையை 2022 ஆம் ஆண்டு பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தமது பிரேரணைகளில் உள்ளடக்கியுள்ளனர்.
மலையக வரலாற்றில் முதல் முறையாக மஸ்கெலிய பிரதேச சபையின் மூலமே தோட்டங்களின் வீதிகளுக்கு இவ்வாறு வீதிவிளக்குகள் பூட்டப்பட்டுள்ளன. மேலும் ஏனைய தோட்டங்களுக்கும் இதனை விஸ்தரிக்க எதிர்ப்பார்ப்பதாக சபையின் செயலாளர் கூறினார். இதில் முக்கியமாக பிரதேசத்தில் உள்ள மக்கள் அமைப்புக்களின் கோரிக்கைகள் பாதீட்டில் இதற்கான நிதியை ஒதுக்குவதற்கு முக்கிய உந்துதலாக அமைந்துள்ளது.
Leave a comment