பா.சதீஸ்
வவுனியா நகரசபையினர் பயன்படுத்தாத வாகனங்களுக்கு 113102. 48 ரூபா பராமரிப்பு செலவாக செலவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியும் இதுவரை நடவடிக்கை எடுக்கபடவில்லை.
ஒரு நகரின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் ஓர் முக்கியமான சபை தான் நகரசபயாகும். குறித்த சபையினர் கழிவகற்றல், சூழலினை சுத்திகரித்தல், வீதிகளை செப்பனிடல், புனரமைத்தல், தீயணைத்தல், மைதானங்கள், பொது கட்டிடங்கள், பூங்காக்கள் அமைத்தல் என நகரினை அழகுபடுத்தி நகரின் விருத்திக்கு பங்களிப்பு செய்யவே ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரசபையினை உருவாக்கியிருக்கின்றார்கள்.
எனவே குறித்த சபையினர் மேற்கூறிய செயற்பாடுகளை தடையின்றி சரிவர மேற்கொள்ளவே அவர்களுக்கென அரசினால் ஒவ்வொரு வேலைத்திட்டங்களுக்கும் பயன்படுத்த கூடிய வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அந்தவகையில் வவுனியா நகரின் விருத்தி செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்வதெற்கென வவுனியா நகரசபையினருக்கு அரசாங்கத்தினாலும், நன்கொடையாளர்களாலும் நோயாளர்காவு வண்டி, long weel, பிக்கப், light motor coach, comoactor, தண்ணீர்தாங்கி, gully bowser, டிப்பர், பக்கோ, தீயணைப்பு வாகனம், மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம், tractor trailer, road roller, hand roller போன்ற 67 வாகனங்கள் வழங்கப்பட்டிக்கின்றது. வழங்கப்பட்ட குறித்த வாகனங்களில் 43 வாகனங்கள் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருவதுடன் ஏனைய 24 வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாது இருக்கின்றது.
வவுனியா நகர சபையினருக்கு வழங்கப்பட்ட வாகனங்களுக்கு என வருடா வருடம் புகைப்பரிசோதனை, காப்புறுதி, உதிரிப்பாக கொள்வனவு, வாகன சுத்திகரிப்பு, எரிபொருள், பழுது பார்க்கும் செலவு என வாகனங்களுக்கான செலவீனங்கள் காணப்படுகின்றது.
அந்தவகையில் குறித்த நகரசபையினரின் 67 வாகனங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான செலவீனம் செலவு செய்யப்படுகின்றது. எடுத்துக்காட்டாக கடந்த 2021ஆம் ஆண்டு நகரசபையினருக்கு சொந்தமான 67 வாகனங்களுக்கும் 46,25,693.61 ரூபா பராமரிப்பு செலவாக செலவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் 10 வாகனங்கள் பாவனையிலிருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டும், பழுது பார்க்க வேண்டிய 13 வாகனங்களும், திருத்தகத்தில் திருத்த வேலை நடைபெறும் ஒரு வாகனமுமாக மொத்தம் 24 வாகனங்கள் பாவனையில்லாமல் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கின்றார்கள்.
இவ்வாறு பயன்படுத்தப்படாது இருக்கும் வாகனங்களுக்கான பராமரிப்பு செலவு அதிகம் என கருதி நகரசபையினர் தமக்கு குறித்த வாகனங்கள் தேவையற்றது என கருதினால் அவற்றை ஏலம் போடவேண்டும் . இவ்வாறு ஏலம் போடுவதன் மூலம் நகரசபையினருக்கான வாகன பராமரிப்பு செலவு குறைவடைவதுடன், அரசிற்கு வருமானமும் கிடைக்கப்பெறும். ஆனால் இவர்கள் 15 வருடங்களை கடந்தும் ஏன் பாவனையற்ற வாகனங்களை விற்பனை செய்யவில்லை.
ஏலம் என்பது எந்திர பொறியியலாளரின் வாகன அறிக்கையுடன் வாகனம் பாவிக்க முடியாத நிலையில் குறித்த வாகனங்களுக்கான பராமரிப்பு செலவு அதிகம் என்பதனால் அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டும் வகையில் வாகனங்களை ஏலம் போடுவதாகும்.
எனவே வாகனங்கள் பாவிக்க முடியாத நிலையில் குறித்த நகரசபையினரிடம் இருந்தால் அதன் பராமரிப்பு செலவினை கருத்தில் கொண்டு அதனை ஏலம் போட வேண்டும். ஆனால் நகரசபையினர் 15 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களைக்கூட இதுவரை ஏலம் போடவில்லை.
ஆனால் வருடா வருடம் பாவனையில்லாமல் இருக்கும் வாகனங்களுக்கு பராமரிப்பு செலவினை செய்கின்றார்கள். இதனால் அரச நிதிதான் வீண்விரயமாகின்றது.
உதாரணமாக பயன்படுத்தப்படாத வாகனங்களில் பழுது பார்க்க வேண்டியிருக்கும் 13 வாகனங்களுக்கும் 85,764.88 ரூபாவும், திருத்தகத்தில் பழுது பார்க்கப்படும் ஒரு வாகனத்திற்கு 1657.85 ரூபாவும், பாவனையிலிருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் 10 வாகனங்களுக்கும் 25679.75 ரூபாவுமாக மொத்தம் 1,13,102. 48 ரூபா என இலட்ச கணக்கில் நகரசபையினரால் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வீண் விரயமாவது அரச நிதியே தவிர நகரசபையினரின் நிதியல்ல, இதனை வைத்து பார்க்கும் போது பயன்படுத்தாத வாகனங்களுக்கென இவர்கள் இலட்சக்கணக்காக செலவழித்திருக்கிறார்கள். இந்த நிலைக்கு யார் காரணம்? இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்?
கட்டுரையாளனால் நகரசபையினரிடம் தகவலறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் பற்றி வினவியபோது,
வவுனியா நகரசபையினரிடம் இருக்கும் பழுதுபார்க்கப்பட வேண்டிய 10 வாகனங்களும், பழுது பார்க்கப்படாமல் இரு வருடங்களாக இருப்பதாகவும், திருத்தகத்தில் திருத்த வேலை நடைபெறும் டிப்பர் வாகனம் கடந்த இரண்டு வருடங்களாக திருத்த வேலை இடம்பெற்று வருவதாகவும், பாவனையில் இருந்து அகற்றுதற்கு தீர்மானிக்கப்பட்ட 13 வாகனங்களும் 15 வருடத்திற்கு மேற்பட்டதாக இருப்பதாகவும் பொறுப்பற்ற விதமாக தெரிவித்திருக்கின்றார்கள்.
உண்மையில் குறித்த வவுனியா நகர சபையினரின் நடவடிக்கைகளுக்கென வழங்கப்பட்டது தான் குறித்த வாகனங்கள். வாகனங்கள் பழுதடைந்தால் அவற்றை உடன் திருத்தம் செய்து பாவனைக்குட்படுத்துவது அவர்களின் கடமை. ஆனால் நகரசபையினர் அவ்வாறு செய்யாமல் பாவனையிலிருந்து அகற்ற தீர்மானித்த வாகனங்களை ஏலம் போடாமல் பல வருடங்கள் தட்டிகழித்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல பழுதடைந்த ஒரு டிப்பர் வாகனத்தை கிட்டதட்ட இரு வருடங்களாக திருத்த வேலைக்கென திருத்தகத்தில் விட்டிருக்கின்றார்கள். இச் செயற்பாடுகள் அனைத்தும் அவர்களின் அசமந்த போக்கினையும் அவர்களுக்கு வாகனங்கள் மேலதிகம் என்பதனையுமே புலப்படுத்தி நிற்கின்றது.
இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக 2019 ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினால் வெளிவந்த கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் பொழிப்பு அறிக்கையில் சபையின் 10 வாகனங்கள் நீண்டகாலமாக பாவனையில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதுடன் இது தொடர்பாக உரிய நடைமுறையை பின்பற்றி பாவனையில் ஈடுபடுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ நாளதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அத்துடன் வாகனங்கள் பாவனைக்கு ஏற்ற வகையில் திருத்தி பாவனையில் ஈடுபடுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கப்பட்டிருக்கின்றது. கணக்காய்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் சபை அனுமதி பெறப்பட்டு பின் அமைச்சின் செயலாளரின் அனுமதியின் பின் விற்பனை செய்யப்படும் என கூறியிருந்தார்.
ஆனால் கணக்காய்வு திணைக்களத்தினர் பிரச்சினையினை சபையினருக்கு சுட்டிக்காட்டி இரு வருடங்களாகியும் இதுவரை பாவனையில் ஈடுபடுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
நகரசபையினர் தமது பாவனைக்காக வழங்கப்பட்ட வாகனங்களில் பழுதடைந்த வாகனங்களை இதுவரை திருத்தம் செய்து பயன்படுத்தவும் இல்லை மாறாக குறித்த வாகனங்களை விற்பனை செய்யவும் இல்லை.
ஆனால் பயன்படுத்தாத வாகனங்களுக்கு வருடா வருடம் பணம் செலவழித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அரச நிதிமட்டுமே விரையமாகி கொண்டிருக்கின்றமை இங்கு வெளிப்படையாகிறது.
Leave a comment