பா.சதீஸ்
நகரின் விருத்திக்கும், அழகிற்கும் பங்களிப்பு செய்வது அந்தந்த இடத்தில் அமைவுபெற்றுள்ள பிரதேசசபை, நகரசபை, மாநகரசபையாகும். அந்தவகையில் வவுனியா நகரினை அண்டி உள்ள பகுதிகளில் நகரினை சுத்தப்படுத்தி நகரின் அழகை பேணுவதும், சுற்றாடல் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதும் வவுனியா நகரசபையினரின் கடமையாகும்.
வவுனியா நகரினை அண்டிய பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றி சூழலினை சுத்தப்படுத்தி சூழல் மாசடைவை தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது நகரசபையினரே.
எனவே குறித்த சபையினர் தமக்கென வழங்கப்பட்ட கடமைகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பது சபையினரின் பொறுப்பாகும்.
நாம் பயன்படுத்தும் பொருளிலிருந்து கிடைக்கும் வீணான பகுதியை குப்பை என்போம். இவை பொதுஇடங்கள், தெருக்கள், வீடுகள், கடைகள் என எல்லா இடங்களிலும் இருக்கின்றன. அவ்வாறு பொது இடங்கள், வீதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை உரிய முறையில் உரிய நேரத்தில் அகற்றுவது அவசியமாகும். கழிவுகளை அகற்றாமல் தேங்கு நிலையில் விடுவதால் துர்நாற்றம் வீசுதல், பிறநுண்ணுயிர்கள் உருவாகுதல், சுற்றுச்சூழல் மாசடைதல் என பாரிய எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் சாத்தியம் உருவாகின்றது. எனவே இத்தகைய நிலமையினை ஏற்பட விடாமல் நகரினை பாதுகாக்கும் நோக்கோடு கழிவுகளை அகற்றி நகரினை சுத்தப்படுத்தும் பொறுப்பு வவுனியா நகரசபையினரையே சாரும்.
அந்தவகையில் வவுனியா நகரிற்கு உட்பட்ட பத்து வட்டாரங்களிலிருந்தும் குறித்த சபையினரால் குப்பைகள் அகற்றப்படுகின்றது. ஒரு நாளில் 18-20 தொன்கள் வரை குப்பைகள் வவுனியா நகரிலிருந்து சபையினரால் அகற்றப்பட்டு குறித்த நகரின் சூழல் சுத்தப்படுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு இடங்களிலும் குறித்த பகுதிக்கு சொந்தமான சபையினரால் அகற்றப்படுகின்ற குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்து மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு அவற்றினை சேதன பசளையாக தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வருமானங்களை பெற்று அதனை நகரின் அபிவிருத்திக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அதேபோன்று வவுனியா நகரசபையினரும் தமக்கு கீழ் இருக்கும் பகுதிகளிலிருந்து அகற்றப்படுகின்ற குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வவுனியா வேப்பங்குளம், பம்பைமடு போன்ற இடங்களில் வைத்து மீள்சுழற்சி செய்து சேதன பசளையாக மாற்றுகின்றார்கள். ஆனால் அதனை விற்பனை செய்யவி்ல்லை மாறாக சேதன பசளையாக மாற்றி சேமித்து வைத்திருக்கின்றார்கள்.
வவுனியா நகர சபையினரால் 2021ஆம் ஆண்டிலிருந்தே அகற்றப்படுகின்ற குப்பைகள் மீள் சுழற்சிக்குட்படுத்தப்படுகின்றது. ஒருநாளைக்கு சபையினரால் 18-20 தொன் குப்பை அகற்றப்படுகின்றதெனில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 6480 தொன் குப்பைகள் அகற்றப்பட்டு தரம்பிரிக்கப்பட்டு அவை மீள் சுழற்சி செய்யப்பட்டு சேதனப்பசளையாக மாற்றப்படுகின்றதே தவிர அவை இதுவரை விற்பனை செய்யப்படவில்லை .
இது தொடர்பாக கட்டுரையாளனால் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தங்களால் அகற்றப்படும் குப்பைகள் மீள்சுழற்சி செய்யப்படுகின்றனவா? மீள் சுழற்சியால் சபைக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? என வினவியபோது சபையினரால் அகற்றப்படும் குப்பைகள் மீள் சுழற்சி செய்யப்படுகின்றது. ஆனால் அவை விற்பனை செய்யப்படவில்லை என பதிலளிக்கப்பட்டிருந்தது.
வவுனியா நகரசபையினர் ஊதியம் கொடுத்து தாெழிலாளர்களை வைத்து குப்பைகளை அகற்றி, அவற்றினை தரம்பிரித்து, மீள்சுழற்சி செய்து மீள்சுழற்சி செய்யப்பட்ட குப்பைகளை சேதன பசளையாக மாற்றி வைத்திருக்கின்றார்களே தவிர அதனை இதுவரை விற்பனை செய்யவில்லை. இதனால் சபையினருக்கு கிடைக்கும் வருமானம் கிடைக்காமல் போகின்றது. அதுமட்டுமன்றி சபையினர் வருமானம் இல்லாத செயற்பாடுகளுக்கு தொழிலாளர்களை வைத்து வேலை செய்வதனால் தொழிலாளர்களின் நேரம் , வலு வீணடிக்கப்படுவதோடு அரச நிதியும் வீணடிக்கப்படுகின்றது. இதற்கு காரணம் சபையினரின் பொறுப்பற்ற செயற்பாடேயாகும்.
இது ஒரு புறமிருக்க 2018ஆம் ஆண்டு வெளிவந்த கணக்காய்வு திணைக்களத்தின் பொழிப்பு அறிக்கையில் திண்மக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பதற்கு மீளாய்வாண்டில் ரூபா 10,79,891 செலவு செய்யப்பட்ட போதும் உர விற்பனை மூலம் மீளாய்வாண்டில் ரூபா 1,47,210 மட்டுமே பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இது மீளாய்வாண்டிற்கான கழிவுரம் தயாரிப்பதற்கான செலவில் 14% சதவிகிதமாக இருந்தது. என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
ஆனால் கட்டுரையாளனால் தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையான மீள் சுழற்சியால் வவுனியா நகரசபையினருக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு என கேட்கப்பட்ட கேள்விக்கு சபையினர் விற்பனை செய்யப்படவில்லை என பதிலளித்திருக்கின்றார்கள். ஆனால் கணக்காய்வு திணைக்களத்தினர் 2018 ஆம் ஆண்டு மேற் கூறப்பட்டது போன்று மீள்சுழற்சி பற்றிய வருமானம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
எனவே தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் கோரப்பட்ட தகவல்களையும், கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையினையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சபையினர் கட்டுரையாளனுக்கு பொய்யான தகவலையே வழங்கியிருக்கின்றார்கள். ஆனால் 2018 ஆம் ஆண்டு கணக்காய்வு அறிக்கையில் சபையினரின் மீள்சுழற்சி பற்றிய வருமானம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாறு சபையினர் உண்மை தகவலை மறைப்பது அவர்களின் அதிகார போக்கினையும், அலட்சியத்தினையுமே வெளிக்காட்டி நிற்கின்றது.
சபையினர் குப்பைகள் சேகரித்து கொட்டப்படும் இடங்களுக்கு மத்திய சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெறப்பட்டதன் பின்னரே அவ்விடத்தில் குப்பைகளை கொட்டமுடியும் என்பது நியதி. அந்தவகையில் வவுனியா நகரசபையினரால் அகற்றப்படுகின்ற குப்பைகள் வவுனியா பம்பைமடுப்பகுதியில் கொட்டப்படுகின்றது. ஆனால் அதற்கு அவர்களால் மத்திய சுற்றால் அனுமதிப்பத்திரம் பெறப்படவில்லை.
இது தொடர்பாக தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் வவுனியா நகரசபையினரிடம் குப்பைகளை அகற்றும் இடங்களுக்கு சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ளதா? , மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ளனவா? என வினவியபோது குப்பை அகற்றப்படும் இடம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குரியது, குறித்த விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு பிரதேசசபையினரை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என பொறுப்பற்ற விதத்தில் நையாண்டி தன்மையுடன் பதில் கூறியிருந்தார்கள்.
2019 ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில் குப்பைகளை அகற்றுவதற்காக காணப்படும் இடங்களுக்கு சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டி சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெறப்படல் வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருக்கின்றது. அதற்கு வவுனியா நகரசபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் இவ் இடங்களை மாற்றக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றமையால் அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பான நடவடிக்கையில் காலதாமதம் காணப்படுகின்றது என பதிலளிக்கப்பட்டிருக்கின்றது.
அதே போன்று 2020 ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினால் வெளிவந்த கணக்காய்வு அறிக்கையில் குப்பைகளை அகற்றுவதற்காக காணப்படுகின்ற இடங்களிற்கு சுற்றாடல் அனுமதிபத்திரம் பெறப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டி சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெறப்பட வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு வவுனியா நகரசபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் இது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபையினருடன் கதைக்கப்பட்டு அங்கு சில திருத்தங்கள் அபிவிருத்தி வேலைகள் செய்த பின்பே சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தினை பெறவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது என பதிலளிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே 2019, 2020 ஆம் ஆண்டு கணக்காய்வு அறிக்கையில் அனுமதிப்பத்திரம் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்ட விடயத்திற்கு சபையினர் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு காலதாமதம் ஆகும் என கூறியிருக்கின்றார்கள். ஆனால் கட்டுரையாளனால் கேட்கப்பட்ட அதே கேள்விக்கு வவுனியா தெற்கு பிரதேச சபையினரை தொடர்பு கொள்வதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கேலிக்கையாக பதில் கூறியிருப்பது சபையினரின் பொறுப்பற்ற செயல் என்பதையும், அவர்களின் அதிகார போக்கினையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது.
ஒவ்வொரு அரச நிறுவனங்களும் மக்களின் நலன் கருதியே நிறுவப்பட்டுள்ளது. எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படுவதும், அதற்கேற்ப செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதும் அரச நிறுவனங்களின் கடமை. ஆகவே வவுனியா நகரசபையினர் தம் அசமந்த போக்கினாலும், அதிகார போக்கினாலும் சபையினருக்கு கிடைக்க வேண்டிய வருமானங்களை தவறவிட்டு அரச நிதிகளை வீண்விரயம் செய்வது மட்டுமன்றி காலத்தினையும் வீணடித்து காெண்டிருக்கின்றார்கள்.
Leave a comment