அருள்கார்க்கி
மஸ்கெலிய பிரதேச சபையானது கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பிரதேச சபையாகும். மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் பிரதேச சபைகளின் மூலம் எவ்வித சேவைகளும் இதுவரை பாரியளவில் இடம்பெறவில்லை.
அதனை நிவர்த்திக்கும் முகமாக புதிதாக உருவாக்கப்பட்ட பிரதேச சபைகளில் புதிய வேலைத்திட்டங்களை முன்மொழிந்து நடைமுறைப்படுத்துவதே தீர்வாக காணப்பட்டது. இவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்ட பிரதேச சபைகளில் மஸ்கெலியா பிரதேச சபையானது நுவரெலியா மாவட்டத்தின் முக்கியமான ஒரு கேந்திர நிலையத்தில் அமைந்துள்ளது.
அதிகமான பெருந்தோட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய இப்பிரதேச சபையானது கடந்த 4 வருடங்களில் சபைக்கு சமர்ப்பித்த பாதீடுகளில் திட்டமிட்ட வருமான மார்க்கங்களில் தொடர்ச்சியாக பாரிய வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. கடந்த இரண்டு வருடங்களில் வருமான அறவீடுகள் வருடத்துக்கு வருடம் எதிர்பார்த்த பெறுமதியை விட குறைவாகவே காணப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வருடங்களில் வருமான அறவீடு குறித்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்யும் போது மஸ்கெலிய பிரதேச சபையானது கடந்த 2020, 2021 ஆகிய இரண்டு வருடங்களில் வீழ்ச்சிப்போக்கையே கொண்டுள்ளது. அதிலும் முக்கியமாக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய துறைகளில் அதிககவனம் செலுத்தவில்லை.
மஸ்கெலிய பிரதேச சபையின் 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் வருமான பிரிவுகளான வரிப்பணம், வாடகை, அனுமதிப்பத்திரக் கட்டணம், சேவைக்கான கட்டணம், பற்றாணைக் கட்டணம், மானியம் ஆகிய வருமான பிரிவுகளின் கீழ் வருமான அறவீடு இடம்பெறுகின்றது.
மேலும் இந்தப்பட்டியலில் வராத ஏனைய வருமானங்களும் இந்த இரண்டு வருடங்களில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வருமான பிரிவுகளின் கீழ் 2020 எதிர்ப்பார்த்த வருமானத்தில் அரைவாசி பெறுமதியே கிடைத்துள்ளது. அதேபோல் 2021 ஆம் ஆண்டு எதிர்ப்பார்த்த வருமானத்தில் 09 மாதங்களில் மூன்றில் ஒரு பெறுமதியே வருமானமாக கிடைத்துள்ளது.
2020 ஆண்டு வருடாந்தம் எதிர்ப்பார்த்த வருமானம் 71,226,532.88 ரூபாவாக கணிப்பிடப்பட்டுள்ளது. எனினும் 2020 ஆம் ஆண்டு கிடைத்த வருமானமாக 31,544,314.94 ரூபா மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. இது வருடாந்த பாதீட்டை திட்டமிடும் போது எதிர்ப்பார்த்த வருமானத்தில் அரைவாசியை விடவும் குறைவானதாகும். இது பாதீட்டில் செலவுகளை திட்டமிடும் போதும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைகளை முன்வைக்கும் போது அவற்றை செய்ய முடியாத சவால்கள் எழுந்துள்ளன.
எடுத்துக்காட்டாக 2020 ஆம் ஆண்டில் வரிப்பணமாக 5,444,820.29 ரூபா எதிர்ப்பார்த்திருந்த போதும் 3,308,924.54 ரூபா மாத்திரமே கிடைத்துள்ளது. அதேபோல் 2021 ஆம் ஆண்டு வரிப்பணமாக 5,073,570.29 ரூபா எதிர்ப்பார்த்திருந்த போதும் 2021 ஆம் ஆண்டு ஒன்பது மாதங்களின் முடிவில் 2,930,867.71 ரூபா மாத்திரமே வரிப்பணமாக கிடைத்துள்ளது. இதுவும் எதிர்ப்பார்த்திருந்த வருமானத்தை விடவும் கணிசமான அளவு குறைவாகும். 2020 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட அனுபவத்தினூடாக அதற்கடுத்த வருடத்திற்கான பாதீட்டை செம்மைப்படுத்தவில்லை என்பது புலப்படுகின்றது.
அதேபோல் 2020 ஆம் ஆண்டு வாடகை வருமானத்தில் எதிர்பார்த்த தொகையாக 7,401,500 ரூபா கணக்கிடப்பட்டு 7,723,020 ரூபா வருமானம் கிடைத்துள்ளது. எனினும் அந்த வருடத்தின் வாடகை வருமானத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து 2021 ஆம் ஆண்டு 9,349,160 ரூபா எதிர்ப்பார்க்கப்பட்டு பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் 2021 ஆம் ஆண்டு ஒன்பது மாதங்களில் 5,339,895ரூபா மாத்திரமே கிடைத்துள்ளது. இது நிச்சயமற்ற ஒரு வருமான மார்க்கத்தை கணக்கிட்டு பாதீட்டை தயாரித்திருப்பதற்கான ஒரு வலுவான சான்றாக உள்ளது.
பிரதேச சபைகளின் மற்றுமொரு முக்கியமான வருமான மார்க்கம் தான் அனுமதிப்பத்திர கட்டணமாகும். அதனை சரியாக திட்டமிட்டு சேவைகளை வழங்குவதனூடாக சபையின் வருமானத்தை அதிகரிக்க முடியும். மஸ்கெலிய பிரதேச சபையின் அனுமதிப்பத்திர கட்டண வருமானம் 2020 ஆம் ஆண்டு எதிர்ப்பார்த்ததை விடவும் 388,558 ரூபா அதிகமாகக் கிடைத்துள்ளது.
இருப்பினும் 2021 ஆம் ஆண்டில் அந்த வருமானம் 1,078,015.74 ரூபா எதிர்ப்பார்த்ததை விடவும் குறைவடைந்துள்ளது. இது முறையாக திட்டமிடாததை காட்டுகின்றது.
மேலும் சேவைக்கான கட்டணமாக 2020 ஆம் ஆண்டு 5,328,800 ரூபா வருமானமாக எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. எனினும் அந்த வருடம் கிடைத்த வருமானமாக 1,713,106.22 ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனடிப்படையில் அந்த வருடத்திற்கான சேவைக்கான கட்டணத்தில் திட்டமிட்ட தொகையில் 3,615,693.78 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகையை அடிப்படையாக வைத்தே இந்த வருடத்திற்கான வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்ப்பார்த்த சேவை கட்டணத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக மஸ்கெலிய பிரதேச சபையின் மூலம் திட்டமிட்ட பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் 2021 ஆம் ஆண்டும் இப்பிரதேச சபையில் சேவைக்கான கட்டணத்தில் எதிர்ப்பார்த்த தொகையை விடவும் 3,136,365.22ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முன்னர் செய்த அதே தவறை மறுமுறையும் இப்பிரதேச சபை வரவு – செலவு திட்ட தயாரிப்பின் போது செய்துள்ளமை தெளிவாக புலப்படுகின்றது.
மேலும் இப்பிரதேச சபையின் மேலுமொரு வருமான மார்க்கமான பற்றாணைக் கட்டணத்தில் 2020 ஆம் ஆண்டு 215,000ரூபா எதிர்ப்பார்த்து வரவு – செலவு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தொகை 2,275,772.21 ரூபா வருமானமாக கிடைத்துள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு பாதீட்டில் பற்றாணைக் கட்டணமாக 3,154,000 ரூபா எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த வருடத்திற்கான வருமானமாக வெறும் 53,793.58ரூபா மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளது. இது அவ்வருடத்திற்கான பாரிய வீழ்ச்சியாகும். அதேபோல் இந்த வகைப்பாடுகளின் கீழ் வராத ஏனைய வருமானங்களிலும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இப்பிரதேச சபையின் மூலம் திட்டமிடப்படும் எவ்வித வேலைத்திட்டங்களையும் முறையாக செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது. இது இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றது. தொடர்ச்சியான வருடங்களில் இவ்வாறு வருமானம் இழப்பு ஏற்படுவதானது அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத சூழலுக்கு இப்பிரதேச சபையை தள்ளியுள்ளது.
மேலும் அரச மானியம் ஒரு பிரதேச சபைக்கு கிடைக்கும் ஒரு முக்கியமான வருமான மார்க்கமாகும். அதன் மூலம் முறையாக தேவையான அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். அந்தவகையில் மஸ்கெலிய பிரதேச சபையானது 2020 ஆம் ஆண்டு 46,448,912.59ரூபா மானியமாக எதிர்ப்பார்த்து திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளது. எனினும் அவ்வருடத்திற்கான மானியம் 14,232,048.35ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தத் தொகையில் பாதீட்டில் திட்டமிட்ட எவ்வித பாரிய திட்டங்களையும் மேற்கொள்ள முடியாத சிக்கல் நிலைமை தோன்றலாம்.
சுகாதாரம், கழிவகற்றல், பாதைகள் சீரமைத்தல், குடிநீர், கட்டிடங்கள் அமைத்தல், கைத்தொழில் அபிவிருத்தி, சூழல் முகாமைத்துவம் உள்ளிட்ட பிரதேச சபைகளின் எவ்வித தேவைகளையும் முறையாக நிறைவேற்ற முடியாத நிலையேற்பட்டுள்ளது. இது அதிகமாக அரச மானியத்தில் தங்கி இருக்கும் ஒரு பாதீட்டின் விளைவாகும்.
இந்நிலைமையானது ஒரு ஆரோக்கியமான திட்டமிடலாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எதிர்ப்பார்க்கும் மானியத்திற்கும் கிடைத்துள்ள தொகைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றமை ஒரு பெரும் பின்னடைவாகும்.
அதேபோல் 2021 ஆம் ஆண்டும் மானியத்தை முறையாக திட்டமிடாமல் அதிகமான ஒரு தொகையை எதிர்ப்பார்த்து பாதீட்டை திட்டமிட்டிருப்பது புள்ளிவிபரங்களினூடு தெளிவாக தெரிகின்றது.
2021 ஆம் ஆண்டு சுமார் 4 கோடி ரூபாய்கள் எதிர்ப்பார்த்திருந்த போதிலும் அண்ணளவாக 1 கோடி ரூபா மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளது.
இது பாரிய ஒரு வித்தியாசமாகும். இந்த தொகையை ஒரு நிச்சயமற்ற வருமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே இதனை நம்பி வருடாந்த பாதீட்டை தயாரிப்பதானது திட்டமிடலை முறையாக மேற்கொள்ளாமையே காணப்படுகின்றது. 2021 ஆம் வரும் 7.5 கோடி ரூபாய்கள் அளவுக்கான வருமானம் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள போதும் சுமார் 2.5 கோடி ரூபா மாத்திரமே வருமானம் கிடைத்துள்ளது.
இது இப்பிரதேச சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மானியத்தை மாத்திரம் நம்பாமல் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்மொழிந்து அதனை சாத்தியமாக்குவதே இப்பிரதேச சபையின் எதிர்காலத்துக்கு சிறப்பான அடித்தளமாக அமையும்.
Leave a comment