(அருள்கார்க்கி)
மஸ்கெலிய பிரதேச சபையானது 4 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட ஒரு புதிய பிரதேச சபையாகும்.
பிரதேச சபைகளின் பாதீட்டை பொருத்தவரையில், இதுவரை மூன்று பாதீடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பொதுவாகவே பொறுப்புக்கூறல், பங்கேற்பு இல்லாமை மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன இலங்கையில் உள்ளூராட்சி சபையில் கேள்விக்குட்பட்டு வந்துள்ளதை காணலாம். மறுபுறம் போதிய விளக்கமற்ற ஆளணியினர், ஊழல், தவறான நிர்வாகம், அரசியல் தலையீடுகள் போன்றவற்றாலும், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள் கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்நோக்குகின்றன.
மஸ்கெலிய பிரதேச சபை ஒரு புதிய பிரதேச சபையாதலால், போதுமான வருமானமின்மை ஒரு பெரும் சவாலாகும். அத்துடன் கிடைக்கும் வருமானத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதும் சிரமமான விடயமாகிறது.
வரவு செலவு திட்டங்களை பொருத்தவரையில், சபையின் குறைந்தபட்ச வருமானத்தை வைத்துக்கொண்டு தான் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை பொருத்தவரையில், மூலதன வருமானம் தான் மிகப்பெரிய தொகையாக காணப்படுகின்றது.
பெரும்பாலும், மஸ்கெலிய பிரதேச சபையை பொருத்தவரையில் வரிகள், கூலி, வியாபார அனுமதிப்பத்திரம், சேவைக்கான கட்டணம், தண்டப்பணம், மானியம் உள்ளடங்கலாக மூலதன வருமானமும் சபையின் வருமானமாக வகைப்படுத்தப்படுகின்றது. இவற்றுள் மூலதன வருமானமே அதிகமான தொகையாகவும், சபையின் பெரும்பாலான செலவீனங்களை ஈடுசெய்யும் வருமான மார்க்கமாகவும் காணப்படுகின்றது.
சம்பளங்கள், பிரயாண செலவு, உபகரண செலவு, மூலதன சொத்துக்களை பேணலும் புனரமைத்தலும், போக்குவரத்து, தொடர்பிணைப்பு அவசிய தேவைகள், வட்டி ஊக்குவிப்புத் தொகை, மூலதன செலவு, கடன் மீள்செலுத்தல் போன்ற செலவீனங்கள் பாதீட்டில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை வருடத்துக்கான எதிர்பார்க்கை செலவீனங்களான அதேவேளை இவை அனைத்தையும் மேற்கொள்ள குறைந்தபட்ச வருமானத்திலேயே இதனை ஈடு செய்யவேண்டிய தேவை மஸ்கெலிய பிரதேச சபைக்கு காணப்படுகின்றது.
2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை பொருத்தவரையில், மூலதன வருமானமாக 129,135,000 ரூபா எதிர்பார்க்கப்படுவதாக பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் இவ்வாண்டுக்கான மூலதன செலவீனமாக 124,330 ரூபா திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருமானத்தில் செலவீனங்களை கழித்துப் பார்த்தால், 480,500 ரூபா வருமானத்தில் எஞ்சியுள்ள தொகையாக அமைகின்றது. இது சபையின் செலவீனங்களுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்ச தொகையாகும்.
மூலதன வருமானத்தை பொருத்தவரையில் சபையின் ஏனைய வருமான மார்க்கங்களை விடவும் அதிகமான தொகையை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புண்டு.
பாதீட்டை வடிவமைக்கும் சந்தர்ப்பத்தில் அரச மானியத்தை நம்பி திட்டமிடுவதை விடவும் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு வருமான மார்க்கங்களை கண்டறிந்து, இதனை மேம்படுத்திக்கொள்வதே சிறந்த நடைமுறையாகும். சமகாலத்தில் எமக்கு ஏற்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு இசைவாக அரச பொது நிதியை உள்ளூராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிப்பதில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது பிரதேச சபைகளை, திட்டமிட்ட அபிவிருத்திகளை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளியது.
கடந்த மூன்று வருடங்களாக இச்சபையின் மூலதன சொத்துக்களை புதுப்பித்தலுக்காகவும் அதன் தரத்தை பேணுவதற்காகவும் செலவிடப்பட்ட தொகையானது பாரிய வேறுபாட்டுடன் காணப்படுகின்றது.
2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் மூலதன சொத்துக்களை புதுப்பித்தலுக்காகவும் பேணுவதற்காகவும் செலவிடப்பட்ட தொகையை பகுப்பாய்வு செய்ததன் ஊடாக இந்த விடயம் புலப்படுகின்றது.
2020ஆம் ஆண்டு மூலதன சொத்துக்களுக்கான புதுப்பிப்பு தொகையாக 2494764.31 ரூபா செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த வருடாந்த செலவீனத்தில் 8 சதவீதமாகும். அதேபோல் 2021 செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான மூலதன செலவீனமாக 1219078.48 ரூபா செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த வருடாந்த செலவுகளில் 5 சதவீதமாகும்.
மேலும் 2020ஆம் ஆண்டு பாதீட்டில் மதிப்பீட்டு செலவாக 3,300,000 ரூபாய்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த வருடாந்த செலவீனத்தில் 4 சதவீதமாகும்.
இவ்வருடத்துக்கான மூலதன செலவீடு ஒதுக்கம் நூறு வீதத்தில் குறைவாக இருப்பினும், மெய் தொகையில் கடந்த இரு வருடங்களை விடவும் அதிகமாக காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கது.
எனவே, மூலதன சொத்துக்களை புதுப்பிப்பதற்கான செலவீனத்தில் முறைகேடுகள் இடம்பெற வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளமையும் இவ்விடத்தில் அவதானிக்க வேண்டும்.
அதேபோல் 2022ஆம் வருடத்தில் மூலதன பெறுகையாக பொது நிர்வாகத்தில் 30,000,000 ரூபாவும், சுகாதார சேவைகளில் 2,725,000 ரூபாவும், பௌதீக திட்டமிடலில் 50,000,000 ரூபாவும், ஏனைய உபயோக தேவைகளில் 46,410,000 ரூபாவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் நீர்ச்சேவை மற்றும் நலன்புரி சேவைகளில் எவ்வித வருமான பெறுகைகளும் குறித்த வருடத்தில் பதிவு செய்யப்படவில்லை. இவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வருமான பெறுகைகளும் குறித்த வருடத்தில் பதிவு செய்யப்படவில்லை. இவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வருமான பெறுகைகளாகும்.
இந்த தொகை வீழ்ச்சியடைவதற்கு பிரதேச சபைக்கு புறம்பான காரணிகளையும் நாம் கணக்கிடாமலிருக்க முடியாது. எனினும், இதில் முக்கியமாக சபையின் பாதீட்டு திட்டமிடல் முக்கியத்துவம் பெறுகின்றது.
அதே வருடத்தில் மூலதன செலவீனங்களாக பொது நிர்வாகத்தில் 30,900,000 ரூபாவும், சுகாதார சேவைகளில் 3,030,000 ரூபாவும், பௌதீக திட்டமிடலில் 53,900,000 ரூபாவும், நீர்ச்சேவைகளில் 200,000 ரூபாவும், ஏனைய உபயோக சேவைகளில் 35,500,000 ரூபாவும், நலன்புரி சேவைகளில் 800,000 ரூபாவும் செலவீனங்களாக அமைகிறது. இவற்றுக்கு மேலதிகமாக சுகாதார சேவைகள் மற்றும் ஏனைய உபயோக சேவைகளில் கடன் மீள செலுத்தலுக்காக முறையே 400,000 ரூபாவும், 4,800,000 ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளது.
இவற்றை பகுப்பாய்வுக்கு உட்படுத்துகையில் மொத்த மூலதன பெறுகையாக 129,135,000 காணப்படுகின்ற அதேவேளை மொத்த செலவீனமாக 129,530,000 ரூபாவும் செலவிடப்படுகின்றது. இந்த செலவுகளை ஈடுசெய்து எஞ்சிய தொகையாக வெறுமனே 9256.89 ரூபா மாத்திரமே மேலதிகமாக காணப்படுகின்றது. இதை ஒரு ஆரோக்கியமான போக்காக எம்மால் அவதானிக்க முடியாது.
இப்பிரதேச சபையின் வருமானமானது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படினும், இருக்கும் மூலதன சொத்துக்களை முறையாக பராமரிப்பதன் ஊடாகவும், மேலதிக செலவீனங்களை குறைப்பதன் ஊடாகவும் அதிகரித்துக்கொள்ளலாம்.
இப்பிரதேச சபையின் உறுப்பினர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடியபோது அனைவரும் நிதிப்பற்றாக்குறையை பிரதான சவாலாக முன்வைத்தனர். இதற்கான காரணங்களை நாம் பகுப்பாய்வு செய்யாமல், பிரதேச சபையின் வருமானத்தை எதிர்காலத்திலேனும் அதிகரித்துக்கொள்ள முடியாது.
இது பிரதேசத்தின் அபிவிருத்தியில் நேரடியாக தாக்கத்தை செலுத்தும் ஒரு விடயமாகும். எனவே, பாதீட்டை வடிவமைக்கும்போது இவ்வாறான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது இப்பிரதேச சபையின் மக்கள் நேர்மறை அபிப்பிராயத்தை மேலோங்கச் செய்யும்.
Leave a comment