பாலநாதன் சதீஸ்
நகரின் விருத்திக்கு பங்களிப்பு செய்யும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் அவர்களின் தேவைப்பாடுகளிற்கு ஏற்ப ஊழியர்களின் நலன் கருதி குறிப்பிட்ட காலத்திற்கு கடன்தொகை சபையினருக்கு கிடைக்கும் இலாப பணங்களில் வழங்கப்படுகின்றது. அவ்வாறு வழங்கப்பட்ட கடன் தொகையினை குறித்த கடனாளிகளிடம் இருந்து உரிய நேரத்தில் அறவிடுவது நகரசபையினரின் கடமையும் பொறுப்புமாகும்.
வவுனியா நகரசபையில் பணிபுரிந்து பதவி விலகிய, ஒய்வுபெற்ற, பதவியிலிருந்து நீக்கப்பட்ட பணியாளர்களும் சபையில் கடன் தொகையை பெற்றிருக்கின்றார்கள். அந்தவகையில் வவுனியா நகரசபையில் கடந்த 12 வருடங்களாக (2010-2022) சபையில் பணியாற்றி பணிபுரிந்து பதவி விலகிய, ஒய்வுபெற்ற, பதவியிலிருந்து நீக்கப்பட்ட பணியாளர்களில் இடமாற்றம் பெற்று சென்ற 70 பணியாளர்கள் சபையினரிடம் இருந்து கடன் தொகையை பெற்றுள்ளார்கள். அதேபோன்று சபையில் இருந்து ஓய்வு பெற்ற 12 பேரும், சபையில் இருந்து பதவிவிலகிய 30 பேரும் சபையில் இருந்து கடன்தொகையை பெற்றிருக்கின்றார்கள். ஆகவே சபையினர் இவர்களிடம் இருந்து கடன் தொகையை அறவிட உரிய காலத்திற்குள் அறவீடு செய்வது சபையினரின் பொறுப்பும், கடமையுமாகும்.
சபையினரிடம் இருந்து கடந்த 12ஆண்டுகளில் சபையில் இருந்து இடமாற்றம் பெற்ற 70 பணியாளர்களும் மொத்தம் 46,20,680 ரூபா கடன் தொகையாக வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் 2017 ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச்சென்ற ஒருவருக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகையில் 48,781 ரூபா இதுவரை சபையினரால் அறவீடு செய்யப்படவில்லை. அதேபோன்று சபையில் கடந்த 12 வருடங்களில் ஓய்வு பெற்று சென்ற பன்னிரெண்டு பணியாளர்கள் மொத்தம் 7,68,809.76 ரூபா கடன்தொகையாக பெற்றிருக்கின்றார்கள். அதில் 2017, 2019 ஆம் ஆண்டுகளில் கடன் பெற்ற மூன்று பணியாளர்களிடம் இருந்து 2,65,661 ரூபா கடன் தொகை இதுவரை அறவிடப்படவில்லை. அதுமட்டுமன்றி குறித்த சபையில் பணியாற்றி சில காரணங்களின் நிமித்தம் பணியிலிருந்து பதவி விலக்கப்பட்ட 30 பணியாளர்கள் மொத்தம் 7,63, 904.35 ரூபா கடன் தொகை பெற்றிருக்கின்றார்கள். அதில் 1998ஆம் ஆண்டு பதவி விலக்கப்பட்ட ஒருவர் பெற்ற கடன்தொகை ரூபா 12975 நிலுவை இதுவரை சபையினரால் அறவிடப்படவில்லை.
இவ்வாறு சபையில் பணியாற்றி ஒய்வு பெற்ற, இடமாற்றம் பெற்றுச் சென்ற, பதவி நீக்கப்பட்டப்பட்டவர்களுக்கு பத்து வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்ட கடன்தொகை இதுவரை முழுவதுமாக அறவிடப்படவில்லை. இதற்கு நகரசபையினரின் அசமந்த போக்கு தான் காரணம்.
எடுத்துக்காட்டாக கணக்காய்வு திணைக்களத்தினரால் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பொழிப்பு அறிக்கையில் செலுத்த வேண்டிய , பெறவேண்டிய கணக்குகள் என தலைப்பிடப்பட்டு சபையினரால் கடந்த வருடங்களில் இடமாற்றம் பெற்றுச் சென்ற அலுவலகர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய பதவியினர் கடன் நிலுவை ரூபா 5,89,655 ரூபா அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
அதேபோன்று கணக்காய்வு திணைக்களத்தினரின் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கணக்கறிக்கையில் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. சபையிலிருந்து இடமாற்றம் பெற்று சென்ற ஐந்து அலுவலர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய பதவியினர் கடன்நிலுவை கூட்டு மாெத்தம் ரூபா 4,89,980 ரூபா அறவீடு செய்வதற்கு சபையினரால் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவும் சபையினரால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலுவலகர் ஒருவரிடம் இருந்து பதவியினர் கடன் நிலுவை ரூபா 28,795 ரூபா கடந்த மூன்று வருடங்களாக அறவிடப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கணக்காய்வு திணைக்களத்தினரினால் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மற்றுமொரு கணக்கறிக்கையில் சபையிலிருந்து கடந்த வருடங்களில் இடம்மாற்றம் பெற்றுச் சென்ற அலுவலர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய பதவியினர் கடன் நிலுவை ரூபா 2,46,260 இனை அறவீடு செய்வதற்கு சட்டரீதியானதும், ஆக்க பூர்வதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியதோடு ஊழியர் கடன் நிலுவையினை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. இதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் அலுவலகர்களிடமிருந்து அறவிட வேண்டிய பதவியினர் கடன் நிலுவை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என பதிலளித்திருந்தார்.
கணக்காய்வு திணைக்களத்தினரினால் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த மற்றுமொரு கணக்கறிக்கையில் சபையினரால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, இளைப்பாறிய மற்றும் இறந்த இரண்டு அலுவலர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய பதவியினர் கடன்நிலுவை ரூபா 93,795 னை அறவீடு செய்வதற்கு சட்ட ரீதியானதும் ஆக்க பூர்வமானதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியதோடு ஊழியர் கடன் நிலுவை அறவிடப்பட வேண்டும் எனபரிந்துரை வழங்கப்பட்டிருந்து.
அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் கடன் நிலுவையினை அறவீடு செய்வதற்காக அவரின் ETF கொடுப்பனவு பெறுமதியை பெற்று கொள்வதற்காக விண்ணப்பிக்கப்பட்டு ETF கம்பெனியில் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என பதிலளித்திருந்தார்.
இவ்வாறு கணக்காய்வு திணைக்களத்தினரின் 2017, 2018, 2019, 2020 ஆண்டு கணக்கறிக்கையில் ஓய்வுபெற்ற, பதவி நீக்கப்பட்ட, இடமாற்றம் பெற்ற அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட கடன் நிலுவை தொகையினை அறவீடு செய்ய நடவடிக்கை எடுப்பதோடு அவை முழுவதுமாக அறவிடப்பட வேண்டும் என தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி இருந்தும் பல வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் தொகை இதுவரை முழுமையாக அறவிடப்படவில்லை இதற்கு காரணம் சபையினரின் பொறுப்பற்ற செயற்பாடேயாகும்.
இது தொடர்பாக தகவலறியும் உரிமை சட்டம் ஊடாக கட்டுரையாளனால் பின்வருமாறு
வினவப்பட்டிருந்தது. சபையிலிருந்து ஓய்வு பெற்ற , பதவிவிலகிய, இடமாற்றம் பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை எவ்வளவு? எப்போது என்ன முறையில் வழங்கப்பட்டது? என கேட்கப்பட்டதற்கு சபையினர் சகலகடன் வழங்கல்களும் நிதிப்பிரமானம் மற்றும் சுற்று நிருபத்திற்கு அமைவாகவே வழங்கப்பட்டு அறவீடு செய்யப்படுவதுடன் அவர்களின் தேவை கருதியே கடன் தொகை வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் கீழ் குறிப்பிடப்படும் நிலுவை தவிர 2022 ஆண்டு அனைத்து கடன் நிலுவைகளும் அறவிடப்பட்டுள்ளது.
இடமாற்றத்தில் சென்ற பணியாளர் ஒருவரிடமிருந்து 48781 ரூபா, ஓய்வூதியத்தில் சென்ற மூவரிடம் 2,65,661 ரூபாவும், பவியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரிடமிருந்து 12,795 ரூபாவும் அறவிடப்படவில்லை எனவும் ஓய்வூதியத்தில் சென்றோரிடம் இருந்து கடனை அறவிட அவர்களின் ஓய்வூதிய பணிக்கொடையில் இருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பதவியிலிருந்த நீக்கப்பட்ட நபரிடம் இருந்து கடன் மாதாந்த பிணையாளியால் செலுத்தப்படுகின்றது எனவும் பதிலளித்திருந்தார்கள்.
அதுமட்டுமன்றி சபையினர் சபையிலிருந்து பதவி விலகிய, ஓய்வு பெற்ற, இடமாற்றம் பெற்று சென்றவர்களிடம் கடனை அறவீடு செய்வதற்கு சபையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு திணைக்களத்தினரின் 2019, 2020 அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள் இது தொடர்பாக கட்டுரையாளனால் தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பின்வருமாறு வினவப்பட்டது.
கடனை அறவிட தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? என வினவப்பட்டது அதற்கு இடமாற்றத்தில் சென்றவர்ளுக்கு திணைக்கள தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும் மாதாந்த அடிப்படையில் செலுத்தப்படுகின்றது.
ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பணிக்கொடையில் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது., பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரின் தற்போதைய நிலுவை 12,795 ரூபா மாதாந்த அடிப்படையில் பிணையாளியால் செலுத்தப்படுவதாக பதிலளிக்கப்பட்டிருந்து.
இவர்களின் பதிலை வைத்து பார்க்கும் போது 1998 ஆண்டு கடன் பெற்று பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரின் பிணையாளிக்கு10.12.2020 , 16.12.2020 ஆம் ஆண்டே இடர்கடன் அறவீடு தொடர்பான கடிதம் அனுப்பியுள்ளார்கள் . அதன் பிற்பாடே பிணையாளியிடம் இருந்து கடனை அறவிடுகின்றார்கள் அப்படி இருந்தும் ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை அவரிடம் இருந்து கடன்தொகை முழுவதுமாக அறவிடப்படவில்லை. அதே போன்று 2017 ஆம் ஆண்டு கடன் தொகை பெற்று இடமாற்றத்தில் சென்ற ஒருவருக்கு அவரிடம் உள்ள கடன் நிலுவையை பெற 30.05.2022 ஆம் ஆண்டே கடிதம் அனுப்பியுள்ளார்கள். இதனை வைத்து பார்க்கும் போது 2017இல் இருந்து கணக்காய்வு திணைக்களத்தினர் தாெடர்ச்சியாக 4வருடங்கள் அறிவுறுத்தியும் அசண்டையீனமாக கடன் தாெகையினை அறவிடாமல் பொறுப்பற்ற விதமாக செயற்பட்டமை வெளிப்படையாக தெரிகின்றது.
ஆகவே கட்டுரையாளனால் தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலையும், கணக்காய்வு திணைக்களத்தினரது அறிக்கையினையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சபையினரால் வழங்கப்பட்ட கடன் தொகை தேவையின் நிமித்தம் வழங்கப்பட்டாலும் உரிய நேரத்தில் அறவிடப்பட்டிருக்க வேண்டும் . ஆனால் சபையினரால் இதுவரை அறவிடப்படவில்லை. இதனை தொடர்ச்சியாக கணக்காய்வு திணைக்களத்தினர் சுட்டிக்காட்டி சபையினர் நடவடிக்கை எடுத்ததாக கூறினாலும் முழுமையாக கடனை அறவீடு செய்யவில்லை. சபையினரின் அசமந்த போக்கினால் சபையினருக்கு கிடைக்க வேண்டிய பணம் இதுவரை கிடைக்கவில்லை. பணத்தினை பெற்றுக்கொள்ள சபையினரும் ஆர்வம் காட்டவில்லை.
Leave a comment