மத்திய அரசாங்கம் மத்திய மாகாண கல்வித்திணைக்களத்திற்கு கொரோனா காலத்தில் தொலைக்கல்விக்காக வழங்கப்பட்ட 6488598.00 ரூபா பெறுமதியான நிதி தனியாருக்கு வழங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிதியானது தனியார் நிறுவனங்களின் பெயர்களில் 6488598 பெறுமதியான மூன்று (3))காசோலைகள் ஊடாக எழுதப்பட்டுள்ளமை கணக்காய்வின் மூலமாக உறுதியாகியுள்ளது.
கணக்காய்வு அறிக்கையை உறுதி செய்த கல்வி அமைச்சின் செயலாளர் என் எம்.எம்.ரணசிங்ஹ இது தொடர்பான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காசோலைகள் எழுதப்பட்டுள்ள விதமும் நிதி முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ள முறையும் பல சந்தேகங்களை எழுப்புவதாக கணக்காய்வை மேற்கொண்ட குழுவினர் தெரிவிக்கின்றனர்.
கொரோனா காலத்தில் தொலைக்கல்விக்காக (ஒன்லைன்) கல்விக்காக வழங்கப்பட்ட நிதியை பாவிக்காது பாதுகாத்த அதிகாரிகள்.வேறு தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு காசோலைகள் தனியார் நிறுவனங்களின் பெயர்களில் எழுதப்பட்டுள்ளமை கணக்காய்வின் பொழுது தெரியவந்துள்ளது.
மத்திய மாகாண கல்வி அமைச்சில் தொடர்ச்சியாக நிதி மோசடிகள் தொடர்பாக பல விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீண்டும் ஒரு நிதி மோசடி தொடர்பாக கணக்காய்வின் மூலம் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் கீழ் வருகின்ற ஹங்குரன் கெத்த கல்வி வலயத்தில் கணணி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக அதிகாரி ஒருவர் தற்காலிகமாக அவருடைய கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தவிர தெல்தெனிய கல்வி வலயத்தில் சுற்றுநிருபத்தை மீறி அதிகாரிகள் செயற்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த இரண்டு விசாரணைகள் தொடருகின்ற நிலையில் அடுத்த கட்டமாக தற்பொழுது கொரோனா காலத்தில் தொலைக்கல்விக்காக வழங்கப்பட்ட நிதி தொடர்பில் கணக்காய்வில் பல குளறுபடிகள் வெளியாகியுள்ளன.
கொரோனா காலத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசின் கல்வி அமைச்சு மத்திய மாகாண கல்வி அமைச்சிற்கு 6488598 ரூபாவை முற்பனமாக வழங்கியுள்ளது.
கொரோனா காலத்தில் வழமை போன்று பாடசாலைகளை நடத்த முடியாத நிலைமை தோன்றியதன் காரணமாக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரை வீட்டில் இருந்தவாறு மாணவர்கள் கல்வியை தொடரும் வண்ணம் அதற்கு ஏற்றாற்போல ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சு கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகம் தொலைக்கல்வி அமைச்சு ஆகியன இணைந்து மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்கு இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே 6488598 ரூபாவை முற்பனமாக வழங்கியது.கடந்த வருடம் (2021) செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி இந்த தொகையானது வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தொகையானது குறித்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படாமல் வேறு தேவைகளுக்காகவும் திட்டமிடப்படாத வகையிலும் காசோலைகள் தனியார் நிறுவனங்களின் பெயர்களுக்கு எழுதப்பட்டிருக்கின்றமை கணக்காய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.
Leave a comment