(அருள் கார்க்கி)
பெருந்தோட்டத்துறைக்கு உள்ளூராட்சி அமைப்புக்களின் சேவைகளை விஸ்தரித்தல் முழுமையாக இடம்பெறாமை இன்றைய உள்ளூராட்சி அரசாங்க முறையில் காணப்படும் மிகப்பெரிய குறைபாடாகும்.
இது பெருந்தோட்ட பகுதியில் உள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் பாரியதொரு சவாலாக அமைந்துள்ளது.
இன்று சர்வதேச நிதிசார் நிறுவனங்களின் உதவியுடன் உள்ளூராட்சி அமைப்புக்களின் சேவைகளை விஸ்தரிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், இவை கிராம, நகர சபைகளுக்கும், வடகிழக்கு பகுதிகளுக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது.
பிரதேச சபைகளில் பாதீடு, அபிவிருத்தி போன்ற விடயங்களில் பெருந்தோட்ட மக்கள் பங்களிப்பு செய்தாலும், அவர்களுக்கு சேவைகளை விஸ்தரிப்பதில் சட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன.
மஸ்கெலிய பிரதேச சபைக்கும் இந்த சிக்கல் நீண்டகாலமாக காணப்படுகிறது. இப்பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பெருந்தோட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். இவர்களால் பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு சபை நிதியை பயன்படுத்தி எவ்வித அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது.
ஆனால், பாதீடு உருவாக்கத்துக்கு பெருந்தோட்ட மக்களிடமிருந்து பின்னூட்டல்களும் ஆலோசனைகளும் கிடைக்கின்றன. ஆயினும், அவற்றை பயன்படுத்தி சபை நிதியை ஒதுக்குவதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.
இலங்கையில் அதிகாரத்தை பன்முகப்படுத்தும் விதத்தில் உள்ளூராட்சி அரசாங்க அமைப்பில் காலத்துக்கு காலம் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், பெருந்தோட்ட மக்களை முழுமையாக உள்வாங்குவதற்கு ஏற்ற சட்ட ஏற்பாடுகள் எவையும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இதனால் பெருந்தோட்ட மக்கள் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கூடாக சேவைகளை பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தேசிய ரீதியாக அறியப்படாதனவாக காணப்படுகின்றன.
இதனால் இம்மக்கள் தோட்ட முகாமைத்துவத்தின் கட்டுப்பாடுகளுக்கும் எதேச்சதிகாரத்துக்கும் உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.
மஸ்கெலிய பிரதேச சபையின் செயலாளரிடம் இது தொடர்பாக வினவியபோது அவர் கூறியதாவது,
“மஸ்கெலிய பிரதேச சபையின் வருமானம் மிகவும் குறைந்ததாகவே உள்ளது. இதற்கு பல காரணிகள் இருப்பினும், இங்குள்ள நிதியைக் கொண்டு நேரடியாக பெருந்தோட்ட பகுதிகளுக்கு சேவையாற்ற முடியாமல் இருந்தது.
1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டமானது 2018ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க பிரதேச சபைகள் திருத்தத்தின் ஊடாக பெருந்தோட்ட பகுதிகளுக்கு தேவையான அபிவிருத்திகளை மேற்கொள்ளும் முகமாக திருத்தப்பட்டது.
பெருந்தோட்ட பிராந்தியங்களில் தோட்ட முகாமைத்துவத்தின் ஒப்புதலின் அடிப்படையில் பாதைகள், பொது வசதிகளை பிரதேச சபையின் நிதியின் மூலம் உருவாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, எமக்குள்ள குறைவான நிதியில் இங்கு அடையாளம் காணும் பிரச்சினைகளை எமது பாதீட்டில் உள்ளடக்குகின்றோம்.
பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து எமக்கு பாதீடு உருவாக்கத்துக்கு மக்களிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைக்கின்றன. ஆனால், தோட்ட நிர்வாகங்களுடன் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது” என்கிறார்.
அதேபோல் மஸ்கெலிய பிரதேச சபையின் உறுப்பினர் எஸ். சுரேஸ்குமார் கருத்துப்படி அவர் சபையின் கவனத்துக்கு கொண்டுவந்த பல வேலைத்திட்டங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.
தனது வட்டாரத்தில் உள்ள மைதானத்தை மேம்படுத்துவதற்கும், தோட்ட நூலகமொன்றை அபிவிருத்தி செய்வதற்கும் சபையின் நிதியின் மூலம் சுரேஸ்குமார் தீர்மானித்துள்ளார்.
எனினும், இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தோட்ட முகாமைத்துவத்தின் ஒப்புதலை பெற்றுக்கொள்வது கடினமாய் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
ஏற்கனவே அவர் பொது நிதியின் மூலம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுப் பயன்பாட்டு கட்டடமொன்றை மேம்படுத்தி, நூலகமாக அமைக்க முடியாத அளவுக்கு பிரதேச சபையின் பக்கமும், தோட்ட நிர்வாக ரீதியாகவும் சட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன.
சபைக்கான வரி வருமானம் மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி, சாமிமலை நகரங்களில் இருந்து கிடைக்கும் அதேவேளை பிரதேச சபை ஆளுகைக்குள் வரும் 11 கிராமசேவகர் பிரிவுகளிலும் அதிகமாக பெருந்தோட்டங்களே காணப்படுகின்றன.
இங்கு சேவை செய்வதற்கு வரி வருமானமும் போதுமானதாக இல்லை என்பதே சுரேஸ்குமார் உள்ளிட்ட பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது.
நியதிச்சட்டங்களின் தன்மை
இன்று நடைமுறையில் உள்ள பிரதேச சபைகள் சட்டமானது 1978ஆம் ஆண்டின் அரசியல் படைப்பின் 11ஆம் அத்தியாயத்தின்படி உருவாக்கப்பட்டது. ஆனால், பெருந்தோட்ட பிராந்தியங்களில் ஆரம்ப காலங்களில் இருந்து பாரிய குறைபாடுகள் காணப்பட்டு வருகின்றன.
பிரதேச சபையின் நிதிசார் விடயங்களில் பெருந்தோட்ட மக்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருப்பதற்கு இந்த சட்டங்களும் ஒரு காரணம் என்பது இச்சட்டங்களை ஆராயும் போது தெளிவாகின்றது.
நிதிச் செலுத்துகையும் பாதீடும்
மொழிக் கொள்கை அமுலாக்கம், தோட்டக் குடியிருப்புக்கள் கிராமமாக அங்கீகரிக்கப்படாமை என்பன இதற்கு பிரதான காரணங்களாகும்.
அதேபோல் பிரதேச சபைகளின் வருமானம் வரி புறவீடுகளிலேயே தங்கியுள்ளது. எனினும், பெருந்தோட்டங்களில் இருந்து பிரதேச சபைக்கு நேரடியாக வரி செலுத்தப்படுவதில் அதாவது பிரதேச சபை சட்டத்துக்கிணங்க பெருந்தோட்ட கம்பனிகளிடமிருந்து அவை முகாமை செய்யும் தோட்டக் காணிகளுக்கு, ஏக்கருக்கான வரியை உள்ளூராட்சி சபைகள் அறவிடுகின்றன.
இவ்வரியை செலுத்துமிடத்து இவ்வுடைமையில் உள்ள கட்டடங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் யாவரும் அவ்வுடைமையின் உரிமை என கொண்டவர்களையும், அவர்களது உடைமைகளையும் வரி அறவீட்டில் இருந்தும் ஏனைய கட்டண அறிவிப்புகளிலிருந்தும் விலக்களிக்க முடியுமென 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 134 (4) குறிப்பிடுகின்றது.
இதன்படி தோட்டக் குடியிருப்புக்களும் அதில் வதியும் மக்களும் தோட்ட முகாமைத்துவத்தின் உடைமைகளாக கருதி, பிரதேச சபைகளுக்கான நிதிச் செலுத்துகையில் இருந்து அவர்களை பிரதேச சபை விலக்கி வைத்திருப்பதோடு, அவர்களால் தமது சொந்த நிதி மூலம் உருவாக்கப்பட்ட கட்டடங்கள், உடைமைகள், என்பவற்றுக்கு உறுதிப்பத்திரம், தொழில் அனுமதிப்பத்திரம், வீடுகளுக்கான வரியிலக்க கட்டடங்களை அமைப்பதற்கான வீதித்திட்ட அனுமதி, தொழிலுறுதி சான்றிதழ் என்பவற்றை வழங்க மறுக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக முன்னாள் உள்ளூராட்சி திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் தர்மசிறி தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கு உள்ளூராட்சி நிதி மூலம் சேவை செய்வதிலுள்ள சட்ட சிக்கல்களை ஏற்றுக்கொள்கின்றார்.
மேலும், பாதீடு உருவாக்கம் மற்றும் பங்கேற்பு விடயங்களில் பெருந்தோட்ட மக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதாகவும் தோட்ட முகாமைத்துவத்தின் உடன்பாடானது தோட்டங்களுக்குள் அபிவிருத்தி செய்வதற்கு முக்கிய தேவையாக உள்ளது.
தோட்ட பாதைகள், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளில் பிரதேச சபையும், தோட்ட நிர்வாகமும் இணைந்து அபிவிருத்திகளை முன்னெடுக்கலாம். ஆனால், அதில் மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன என்று தெரிவித்தார்.
மேலும், வரிப்பணம் அறவிடப்படுவதிலும், தோட்டத்துக்கும் நகரங்களுக்கும் இடையே வேறுபாடு காணப்படுவதாக தெரிவித்தார்.
உள்ளூராட்சி அமைப்புகளின் சட்டங்களுக்கிணங்க எந்தவொரு உள்ளூராட்சி அமைப்பும் தமது சபைக்கான வரியிருப்பாளர்களின் பெயரிலேயே ஆவணங்களை வழங்க முடியும்.
பெருந்தோட்ட குடியிருப்புகளில் வாழ்பவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு வரிச் செலுத்தாமையினால் அவர்கள் வரியிருப்பாளர்களாக கருதப்படுவதில்லை. இதன் காரணமாக தோட்ட மக்களின் குடியிருப்புகள் அவர்களின் பெயர்களில் பதிவு செய்யப்படுவதில்லை. இதனாலேயே அவர்களின் உடைமைகளுக்கு எவ்வித பெறுமானத்தையும் பிரதேச சபைகளால் தீர்மானிக்க முடிவதில்லை.
எனவே, மஸ்கெலிய பிரதேச சபையின் உறுப்பினர்கள் சபை நிதியை பயன்படுத்துவதிலும் பெருந்தோட்டங்களில் இருந்து சபைக்கு வருமானத்தை பெறுவதிலும் இந்தச் சட்டங்கள் தடையாக உள்ளது. ஏனைய பிரதேச சபைகளிலும் அவ்வாறான போக்குகளே காணப்படுகின்றன.
எனவே, இதற்கான மூலோபாய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமாகிறது.
Leave a comment