(பாலநாதன் சதீஸ்)
மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு உருவாக்கப்படுவதே பொது நூலகமாகும். அறிவுத் தேடலுக்கான இடமாகவும், தகவல்களை வழங்கும் தகவல் மையங்களாகவும் பொது நூலகங்கள் இயங்குகின்றன.
அந்த வகையில் வவுனியாவிலுள்ள பொது நூலகமானது வவுனியா மாவட்ட நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
இந்நூலகம் 2019ஆம் ஆண்டு தரம்-1ஆக தரமுயர்த்தப்பட்டுள்ளது. 1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நூலகம் வவுனியா நகரசபையின் கீழ் இயங்கி வருகிறது.
இந்நூலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை காலத்துக்கேற்ற வகையில் நவீனமயப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடுவது நகரசபையினரின் கடமையாகும்.
பொதுவாக நூலகத்தின் பௌதீக வளங்களை சபையினர் காலத்தின் மாற்றத்துக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும். ஆனால், இங்கே சபையினர் பௌதீக வளங்களை சரியான முறையில் மாற்றியமைக்கவில்லை.
சபையினர் பொது நூலகத்துக்கென ஒரு தொகுதி நிதி ஒதுக்கப்பட்டிருந்தும், குறித்த நூலகத்தில் கால ஓட்டத்துக்கேற்ப ஆவணச்சேர்க்கைகள், போதிய ஆளணி, பார்வையற்றோர் பகுதி, இலத்திரனியல் பகுதி என்பன முழுமையற்றதாகவே காணப்படுகின்றன. இவை முழுமைப்படுத்தப்படாததற்கு காரணம், நகரசபையினரின் அசமந்தப்போக்காகத்தான் இருக்க முடியும்.
ஏனெனில், 2017ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், நூலக கட்டட நிதி வைப்புக்கள் ரூபா. 6,71,373 உரிய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படாமல் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதேபோன்று 2018ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், நூலக கட்டட வைப்புக்கள் ரூபா. 6,71,373 உரிய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படாது காணப்படுவதாக சுட்டிகாட்டப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு 2019ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், நூலக கட்டட நிதி ரூபா. 7,45,225 கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக உரிய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டிராது, பொது வைப்புக் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி, உரிய விதிகளின் அடிப்படையில் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது.
அதற்கு சபையினரின் கணக்கீடு உத்தியோகத்தர், “இந்த 2 வைப்புக்களும் நிலையான வட்டி தரும் வைப்புக்களாக பேணப்பட்டு வருவதுடன், தேவையேற்படும்போது பயன்படுத்தப்படும் என்பதை தயவுடன் அறியத்தருகிறேன்” என பதிலளித்திருந்தார்.
தொடர்ந்து 2020ஆம் ஆண்டு வெளிவந்த கணக்காய்வு திணைக்களத்தினரின் பொழிப்பு அறிக்கையிலும் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
நூலக கட்டட நிதி ரூபா 474,293 கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக உரிய நோக்கத்துக்காக பயன்படுத்தப்படாமல், தேக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், உரிய விதிகளின் அறிவுறுத்தல்களுக்கமைய செயற்பட வேண்டும் என பரிந்துரை வழங்கியிருந்தார்கள்.
அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர்,
“வைப்புக்களில் ஒன்று மட்டுமே நூலக வைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய வைப்பானது பொது வைப்பாகவே பேணப்பட்டு வருகின்றது. நிலையான வைப்பு வட்டி சபைக்கு வருமானமாக கிடைப்பதுடன், அபிவிருத்தி தேவையேற்படின் பயன்படுத்தப்படும் என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்” என பதிலளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது வவுனியா நகரசபையினர் கால நகர்வுக்கேற்ப நூலகத்தினை மாற்றியமைக்காமல், அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியினை பொதுவைப்பில் தேக்கி வைத்திருந்தார்களே தவிர, நூலக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.
கைக்குள் உலகம் சுருங்கியிருக்கும் நவீன கணினி யுகத்தில் நூலகங்களும் இன்று எல்லா இடங்களிலும் இலத்திரனியல்மயம் ஆக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கால மாற்றத்துக்கேற்ப வவுனியா பொது நூலகமும் இலத்திரனியல்மயம் ஆக்கப்பட்டதாக கூறினாலும், அது இதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை என்றே கூறலாம்.
2019ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், சபையினரால் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இலத்திரனியல் நூலகம் ரூபா. 8,95,453 செலவில் 2018 ஜூன் மாதம் 18ஆம் திகதி பூர்த்தி செய்யப்பட்டிருந்தும், இதுவரை பயன்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டி, பாவனைக்கு உட்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பரிந்துரையும் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர், “இலத்திரனியல் நூலகம் ஆளணி இன்மையால் முழுமையான பாவனைக்கு உட்படுத்தப்படாமல் இருக்கின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்” என பதிலளித்திருந்தார்.
இது தொடர்பாக கட்டுரையாளரால் தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக சபையினரால் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இலத்திரனியல் நூலகம் பயன்பாட்டில் உள்ளதா? இலத்திரனியல் நூலகத்துக்கு என ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, குறித்த வேலைத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டு, எப்போது முடிவடைந்தது என்பது குறித்து கேள்விகள் வினவப்பட்டன.
அதற்கு, இலத்திரனியல் நூலகம் தற்போது பயன்பாட்டில் இருப்பதாகவும், உலக வங்கியினால் ரூபா. 6,50,000 நிதி வழங்கப்பட்டதாகவும், குறித்த வேலைத்திட்டம் 2022.08.03 அன்று ஆரம்பிக்கப்பட்டு 11.04.2022 அன்றைய தினம் முடிவடைந்ததாகவும் பதிலளித்திருந்தார்கள்.
கணக்காய்வு திணைக்களத்தினரது அறிக்கையினையும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட கட்டுரையாளரது தகவலையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கணக்காய்வு திணைக்களத்தினர் 2019ஆம் ஆண்டு இலத்திரனியல் நூலகம் பற்றி சுட்டிக்காட்டியிருந்தும், சபையினர் பொறுப்பற்ற செயற்பாட்டினால் நூலகத்தை முழுமையான பாவனைக்கு இதுவரை உட்படுத்தவில்லை.
அதுமட்டுமன்றி, கட்டுரையாளரால் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் இலத்திரனியல் நூலக வேலைத்திட்டத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு குறித்து வினவப்பட்டபோது, 2022.08.03 அன்று ஆரம்பிக்கப்பட்டு 11.04.2022 அன்று முடிவடைந்ததாகவும் பதிலளித்திருந்தார்கள். ஆனால், 2019ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையில் 2018ஆம் ஆண்டே வேலைத்திட்டம் முடிவடைந்துவிட்டது. ஆனால், வேலைத்திட்டம் முழுமைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
குறித்த விடயம் தொடர்பாக சபையினர் வழங்கிய தகவலில் உண்மைத்தன்மை இல்லை என்பதும் வெளிப்படையாகிறது.
அது ஒருபுறமிருக்க, சபையினர் இலத்திரனியல் நூலக வேலைகள் முடிவடைந்தும், அது பாவனையில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதற்கு ஆளணி பற்றாக்குறை காரணம் என 2019ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையில் சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் கூறியிருக்கிறார். அப்படியெனில், சபையினர் நூலகத்துக்கு தேவையான வெற்றிடங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால், சபையினர் அதற்கு நிவர்த்தி செய்ததாக தெரியவில்லை.
இது தொடர்பாக கட்டுரையாளரால் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் இலத்திரனியல் நூலகத்தில் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்? இலத்திரனியல் நூலகத்தில் பணியாற்ற இன்னும் எத்தனை ஊழியர்கள் தேவை? போதிய ஊழியர்கள் பணியாற்றுகின்றார்களா? ஊழியர் வெற்றிடம் காணப்படுகிறபோது தங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என வினவப்பட்டது.
அதற்கு வவுனியா நகரசபை தகவல் அதிகாரி பதிலளிக்கையில்,
ஒரு ஊழியரே பணியாற்றுவதாகவும், நூலகர், நூலக பரிகாரர், தொழிலாளி என மூன்று ஊழியர்கள் தேவை எனவும், வவுனியா பொது நூலகமானது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் தரம்-1 பொது நூலகமாக 26.02.2019 தொடக்கம் தரமுயர்த்தப்பட்டதன் பிரகாரம், ஆளணி உருவாக்குவதற்காகவும் நிரப்புவதற்காகவும் எம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு:
* தரம் 1 பொது நூலகத்துக்குரிய பதவி வெற்றிடங்களை உருவாக்கவும், நிரப்புவதற்கும் உரிய அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டது.
* குறித்த விண்ணப்பம் உரிய தொடர்பாடலுக்கமைவாக சிபாரிசு செய்யப்பட்டு, வட மாகாண பிரதம செயலாளர் அவர்களின் NP/17/P&T/04/cadre/ 21 இலக்க 30.09.2019ஆம் திகதி கடிதம் மூலம் சிபாரிசு செய்யப்பட்டு பணிப்பாளர் நாயகம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
* அதன் பிரகாரம், எம்மால் கோரப்பட்ட ஆளணி உருவாக்கம் தொடர்பில் நூலகத்தில் தற்போதுள்ள ஆளணி வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியும், எமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அவர்கள் DMS/NP/0630 இலக்க 18.10.2019ஆம் திகதிய கடிதம் மூலம் அறியத்தந்துள்ளதாக வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அவர்கள் NP/14/01/FR-71/2019 இலக்க 01.11.2019ஆம் திகதிய கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
* இந்நிலையில் திறைசேரியின் செயலாளர் அவர்களின் DMS/policy/Recruitments இலக்க 2019.11.20ஆம் திகதிய சுற்று நிருபத்துக்கமைவாக, மறு அறிவித்தல் வரும் வரை எவ்வித நியமனங்களையும் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
ஆகவே, கணக்காய்வு திணைக்களத்தினரது தரவுகளையும், கட்டுரையாளரால் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கணக்காய்வு திணைக்களத்தினர் 2019இல் இருந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகியும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தாம் நடவடிக்கை எடுத்ததாக கூறினாலும், இதுவரை இலத்திரனியல் நூலகத்தினை முழுமையான பாவனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்கும், அங்கு காணப்படும் ஊழியர் பற்றாக்குறைக்கும் பொறுப்பேற்க யாரும் இல்லை என்பது தெளிவாகிறது.
Leave a comment