ரூ.3.87 கோடி செலவில் கலையகம்: ஆனால் ரூபவாஹினியில் ஒளிப்பதிவு செய்ய ரூ.214.7 பில்லியன் செலவு
பொறுப்புக்கூற முடிவெடுத்த பணிப்பாளர் சபை இல்லை
அரசாங்க நிறுவனங்களைப் பொறுப்பக்கூற வைக்கசட்ட விதிமுறைகள் உள்ளனவா?
அரச நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் சேவையாற்றும் அதிகாரிகளால் காலத்துக்குக் காலம் எடுக்கப்படும் தீர்மானங்களால் அரச நிதிக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுவதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராயும் வகையில் கோப் குழு பாராளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் (10) கூடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அபிவிருத்தி லொத்தர் சீட்டிழுப்பு நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்யும் நோக்கில் 38.75 மில்லியன் ரூபாய் செலவு செய்து 2010 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த கலையகத்தை உரிய நோக்கத்திற்காக 2015 முதல் இதுவரை பயன்படுத்தாமை தொடர்பில் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது. மேலும், இதே நோக்கத்திற்காக அவ்வாறான நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 2146.82 மில்லியன் ரூபா பணம் செலுத்தியமை தொடர்பிலும் குழு வினவியது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் மானிய விலையில் ஒளிப்பதிவு செய்வதால் இந்தக் கலையகம் தேவையில்லை எனவும், அதனை கேட்போர் கூடமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது கோப் குழுவின் முன்னாள் தலைவர் கருத்துத் தெரிவிக்கும் போது
வெவ்வேறு தலைவர்கள் மற்றும் பணிப்பாளார் சபைகளின் தேவைக்கு ஏற்ப இவ்வாறான திட்டங்களை ஆரம்பிப்பதால் பாரிய நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், அவ்வாறான திட்டங்கள் முறையாக உள்வாங்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் முறையான அறிக்கையொன்றை அமைச்சின் செயலாளர் ஊடாக குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் முன்னாள் கோப் தலைவர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக வொக்க்ஷோல் வீதியில் இலக்கம் 234 எனும் கட்டடத்தை வாடகை அடிப்படையில் சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அபிவிருத்தி லொத்தர் சபையினால் ஒருதலைப்பட்சமாக மீறியதால் சபைக்குக் கிடைக்கவேண்டிய 5,700,000 ரூபாய் நிதியை 14 ஆண்டுகளாக அறவிட முடியாமல் இருப்பது தொடர்பிலும் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.
அபிவிருத்தி லொத்தர் சபை வர்த்தக அமைச்சின் கீழ் இருந்த போது மேற்படி கட்டடம் வர்த்தக அமைச்சினால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், தமது சபைக்கு கட்டடம் தேவைப்படுவதால் மேற்படி கட்டடத்தை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சு அறிவித்ததாக சபை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அமைச்சின் இடைக்கால குத்தகையின் கீழ் இந்தக் கட்டடத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சபையினால் இந்தக் கட்டடத்தை பயன்படுத்தும் போது மேலதிக நிதி செலவிடப்படுவதால் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததாகவும், கட்டடத்துக்கான அடிப்படை கட்டணம் வர்த்தக அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இங்கு புலப்பட்டது. அதற்கமைய உரிய நிதியை பெற்றுக்கொள்வைத்து தொடர்பில் அமைச்சின் செயலாளரின் அவதானிப்புக்களை கோரியுள்ளதாகவும் இதற்காக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
2015 மே மதம் 25 ஆம் திகதி இலக்கம் பி.ஈ.டி/01/2015 எனும் அரசாங்க முயற்சியாண்மை சுற்றுநிருபத்துக்கு அமைய தகைமைகளை பூர்த்தி செய்யாத போக்குவரத்து உரிமை அற்ற அதிகாரிகள் 08 பேருக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை ஒதுக்கியமை மற்றும் எரிபொருள் மணியத்துக்காக 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் 2,590,545 ரூபா நிதி வழங்கியமை தொடர்பில் கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
அபிவிருத்தி லொத்தர் சபை ஜனாதிபதி செயலகத்தின் கீழ்இருந்த போது வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் வாகனங்கள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வாறான வாகனங்களை வழங்குவதை நிறுத்துமாறு அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி உரிய அனைத்து ஆவணங்களுடன் அறிக்கையொன்றை குழுவிற்கு அனுப்புமாறு கோப் குழுவின் தலைவர், நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.
2008 ஆம் ஆண்டில் முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக 8,095,000 ரூபா பெறுமதியான கெப் வாகனமொன்றை சபையின் தலைவரால் பெற்று அதனை சபையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அன்று முதல் அந்த வாகனம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் கோப் குழு நீண்ட நேரம் வினவியது.
அந்த வாகனத்துக்காக முகவர் நிறுவனத்துக்கு கொடுப்பனவு செய்யாமை காரணமாக அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்ததால் அபிவிருத்தி லொத்தர் சபையினால் அந்நிறுவனத்துக்கு சுமார் 16,190,000 ரூபா செலுத்தவேண்டி ஏற்பட்டது. இந்த வழக்குக்காக சபையினால் மேற்கொள்ளப்பட்ட சட்டத்தரணிகள் கொடுப்பனவு உள்ளிட்ட 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான முழு நட்டம் 26,634,185 ரூபாவாகும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய இந்தக் நட்டத்தை அறவிடுவதற்கு சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இதன்போது சபையின் தலைவர் தெரிவித்தார்.
இந்த நட்டம் தொடர்பி்ல் தேசிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் வினவிய போது
தேசிய லொத்தர் சபையினால் 2010 ஆம் ஆண்டின் போது ரூபா 38,752,448 தொகை செலவில் லொத்தர் சீட்டிழுப்பை ஒலிப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக கலையரங்கமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த கலையரங்கம் உரிய நடவடிக்கைகளுக்காக
பயன்படுத்தப்படாதிருந் ததுடன் கலையரங்கத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் மூலம் 2012 ஐூன் மாதத்தின் போது
வழங்கப்பட்ட சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கும் சபை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. அதன் பிரகாரம் சபைக்குச் சொந்தமான கலையரங்கம் பயன்படுத்தப்படாமல் லொத்தர் சீட்டிழுப்புக்கள் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுவதற்காக மீளாய்வாண்டின் போது ரூபா 36,850,000 தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட்டிருந்ததுடன் சபையின் கலையரங்கம் சபையின் விரிவுரை மண்டபமாக பயன்படுத்தப்பட்டிருந் ததாக 2015 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் அறிக்கை குறிப்பிடுகின்றது
முறையான பிரகாரம் கொள்வனவுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையும், குறித்த காலப்பகுதியில் லொத்தர் சீட்டுக்களை அச்சிடுவதற்காக உடன்படிக்கை கைச்சாத்திடப்படாமை போன்ற காரணங்களினால் அச்சிடல்
நடவடிக்கைகளிலிருந்து சபைக்கு ரூபா 6,093,297 தொகையான நட்டம் ஏற்பட்டிருந்ததாகவும்
ஒன்றிணைந்த தகவல் முறைமையொன்றை ஏற்படுத்துவதற்காக மீளாய்வாண்டின் போது கூட்டுமொத்தமாக ரூபா 3,472,393 தொகை செலவிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் அந்த செயற்பாடுகள் இரத்துச் செய்யப்பட்டமையினால் இந்த செலவினம் பயனற்ற செலவினமொன்றாகியிருந்ததாக கணக்காய்வாளர் தலைமை அதிபதி தெரிவித்தார்.
லொத்தர் விற்பனை செய்வோரிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூபா 26,691,000 தொகை நிர்ணயிக்கப்பட்டதன் பிரகாரம் சபைக்கு நேரடியாக கிடைக்க கூடிய ரூபா 184,100 ஆன வட்டி வருமானமொன்று இழக்கப்பட்டிருந்ததுடன் இந்த லொத்தர் சீட்டுக்களின் பரிசுக்காக வழங்கப்பட்ட வேண்டிய வண்டியின் பெறுமதி லொத்தர் சீட்டு வருமானத்தின் 47 சதவீதமான ரூபா 12,697,755 ஆக இருந்த போதிலும், வழங்கப்பட்ட வண்டியின் பெறுமதி 67 சதவீதமான ரூபா 18,000,000 ஆக இருந்தமையால் நிர்ணயிக்கப்பட்ட பரிசுத்தொகையை மிகைத்து ரூபா 5,305,245 செலவிடப்பட்டுள்ளதாக 2017 ஆம் ஆண்டின் கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த சீட்டிழுப்பிற்காக அச்சிடப்பட்ட மொத்த லொத்தர் சீட்டுக்கள் விற்பனை செய்வதற்கு முன்னர் சீட்டிழுப்பு நடாத்தப்பட்டமையால் எஞ்சிய 7204 லொத்தர் சீட்டுக்களுக்குரிய அச்சிடல் கிரயமான ரூபா 396,220 தொகை சிக்கனமற்ற செலவினமொன்றாக கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டதாக கணக்காய்வு அறிக்கை குறிப்பிடுகின்றது.அதாவது 32 ஆவது கொழும்பு எயார்போட் சுபர் டிரோ லொத்தர் சீட்டிழுப்பிற்கு செல்லுபடியான ரூபா 627,750 பெறுமதியான காணாமல் போன 135 லொத்தர் சீட்டுக்களின் பெறுமதியை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் தேசிய லொத்தர் சபையினால் எடுக்கப்பட்டிருக்கவில்லையெனவும்,சபைக்கு எதிராக 6 வெளிநபர்களினால் வேலை இடைநிறுத்தியமை சபைக்கு வழங்கிய சேவைகளுக்கான கொடுப்பனவு செய்யாமை இரத்துச் செய்யப்பட்ட வெகுமதி உரித்துக்கு கடன் வழங்கப்பட்டமை போன்ற காரணங்களின் அடிப்படையில் 84,905,330 இழப்பீடாக கோரி 6 நீதிமன்றங்களால் வழக்கு தொடரப்பட்டுளளதாகவும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் அரசிற்குரிய 02 காணிகளில் சுற்றுலா விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டு பேணப்படாதிருந்த போதிலும் அக் காணியின் உரித்தினை சட்டரீதியாக கையேற்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில லை அதேவேளை, 2003 ஜூன் 02 ஆந் திகதி பீஈடீ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின்பிரகாரம் சபைக்குச் சொந்தமான வளங்கள் அமைச்சிற்கோஅல்லது ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்கோ வழங்க முடியாதிருந்த போதிலும் அதற்கு முரணாக சபையின் 08 உத்தியோகத்தர்கள் நிதியமைச்சிற்காக 2017 ஜனவரி முதல் விடுவிக்கப்பட்டிருந்தனர். மேலும், அந்த உத்தியோகத்தருக்கு சபையிலிருந்து செலுத்தப்பட்ட ஊழியர் ஊதியம் மற்றும் ஊக்குவிப்பு படியான ரூபா 1,589,656 தொகையினை மீளளிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை என குறித்த கணக்காய்வு அலுவலகம் தெரிவித்தது.
2015 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் அறிக்கையின் படி,
2014 | 2015 | |
தேசிய லொத்தர் சபையின் மொத்த இலாப | 44% | 43% |
தேசிய இலாப விகிதம் | 19% | 19% |
நடைமுறை விகிதம்: | 1:1.5 | 1:1.6 |
2017 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் அறிக்கையின் படி
2016 | 2017 | |
மொத்த இலாபம் | 13.02% | 12.36% |
தேறிய இலாபம்/நட்டம் | 2.05% | 0.83% |
நடைமுறைச் சொத்து விகிதம்: | 1.34:1 | 1.65:1 |
விரைவுச் சொத்து விகிதம்: | 1.31:1 | 1.61:1 |
2018 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் அறிக்கையின் படி
2017 | 2018 | |
மொத்த இலாபம் : | 12.36% | 13.04% |
தேறிய இலாபம்/நட்டம் சதவீதம்: | 0.83% | 0.67% |
நடைமுறைச் சொத்துவிகிதம் : | 1.65:1 | 1.75:1 |
விரைவுச் சொத்து விகிதம் : | 1.61:1 | 1.73:1 |
இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவிடம் நாம் வினவினோம்,
மொத்த நட்டம் எவ்வளவு என்பதை சரியாக உறுதியாக என்னால் கூற முடியாது. குறிப்பிடும் அளவுக்கு பாரிய அளவிலான நட்டங்கள் எட்டப்படவில்லை என கருதுகிறேன். அவர்களிடம் இருந்த பெரிய பிரச்சினை தான் கள்ள டிக்கட் விநியோகித்தது.அதாவது ஒரே இலக்கத்தை கொண்ட பல டிக்கட்கள் அச்சிடப்பட்டிருந்தன. அதில் சாதாரணமாக 8-12 சதவீதமான டிக்கட்கள் கள்ள டிக்கட்களாகவே இருந்தது.
மறுபக்கத்தில் பார்க்கும்போது வருமான ரீதியில் குறிப்பிடும் அளவுக்கு எந்த வளர்ச்சியும் காணப்படவில்லை. நிறைய வகையான டிக்கட்கள் வைக்கப்பட்டாலும் அதில் வருமானம் போதியளவில் இல்லை.
புதிதாக டிக்கட்கள் அச்சிடப்பட்டாலும் வருமானம் ஒரே அளவிலேயே காணப்பட்டது. இவர்களது Budjet குறிப்பிட முடியாதளவு அதிகரித்திருந்தது.
குறிப்பாக டிக்கட் அச்சிடும் இடம் சம்பந்தமாக பிரச்சினையொன்றும் இருந்தது. அதாவது குறைந்த விலைக்கான கோரிக்கையில் தானா வழங்கப்படுகிறது சம்பந்தமாக பிரச்சினைகள் இணங்காணப்பட்டது.
குறிப்பாக ஒரே இலக்கத்தில் அச்சிடப்பட்டதும் அதற்கான பரிசுகள் வழங்கப்படாததுமே இங்கு பிரதான மோசடியாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க தெரிவித்தார்.
இந்த நட்டம் குறித்து தேசிய லொத்தர் சபையின் தலைவரை தொடர்புகொண்டு நாம் வினவினோம்,
தேசிய லொத்தர் சபையில் எந்த இழப்புக்களும் பாரியளவில் இல்லை என தலைவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக , தேசிய லொத்தர் சபையில் டிக்கெட்டுகளை அச்சிடும் போது மோசடிகள் ஏற்பட்டதாக எம்மிடம் கூறினார் அது சம்பந்தமாக தேசிய லொத்தர் சபையின் தலைவரிடம் நாம் வினவினோம்.
எங்களது மகஜன சம்பத எனும் டிக்கட் அதிகமான விற்பனைக்குரியது. அது எழு நாட்களும் விற்பனை செய்யப்படுகின்றது. சுமார் 1.1 மில்லியன் தினந்தோறும் விற்பனைகள் நிகழ்கின்றன. 2018 இல் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டு குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய அரச நிறுவனங்களுக்கு வருமானம் ஈட்டும் நோக்கில் State Printing Corporation (SPC) அதற்கு வழங்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார சிக்கலினால் காலப்போக்கில் அச்சிடுவதற்கு கடதாசி கொண்டு வர முடியாமல் போனது. இதனை தொடர்ந்தே எமக்கு அச்சிடுவதில் பிரச்சினைகள் உருவாகின. அதை தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு அச்சிடும் திட்டம் வழங்கப்பட்டது. அவர்கள் எங்களுக்கு உரிய நேரத்தில் டிக்கட்டுகளை வழங்குகின்றனர். இதை தொடர்ந்து SPC, அரசாங்கத்துடன் பிரச்சினையை தீர்பதற்கான வழிமுறைகளை ஆலோசனை மூலம் பெற்றிருப்பதாக நான் அறிவேன்.
இதை தொடர்ந்து வாகனம் மற்றும் கட்டிடம் சம்பந்தமாக 2015 -2018 காலப்பகுதிக்குள் இடம்பெற்ற நட்டம் தொடர்பில் வினவினோம் அது தொடர்பில் தங்களுக்கு போதிய தகவல் தெரியாது எனவும்,பெரிதளவான நட்டம் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தர்.
அரசாங்க நிறுவனங்களைப் பொறுப்புக்கூற வைக்க சட்ட விதிமுறைகள் உள்ளனவா என சட்டத்தரணி ருடானி சாஹிரிடம் வினவிய போது,
அரச நிறுவனங்களை பொறுப்புக்கூற வைப்பதற்கான சட்ட விதிமுறைகள் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அங்கீகாரம் இருக்கின்றது. சட்டத்திலும் அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அரச நிறுவனங்களின் மோசடியொன்றை குற்றப்பதிவிடுவதற்கான வழிமுறைகளாக முதலில் குறிப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல்(Bribary Comission) ஆணையகத்தில் முறைப்பாடு ஒன்றை இட்டு அதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID ) முறைப்பாடு செய்து அதன் பின்னர் குறிப்பிட்ட மோசடிக்கு பொருத்தமான நீதிமன்றம் வரை வழக்கை கொண்டு செல்லலாம். குறிப்பாக உச்ச நீதிமன்றம் (Supreme court ) வரை கொண்டு செல்ல முடியும் என சட்டத்தரணி சாஹிர் தெரிவித்தார்.
-அப்ரா அன்ஸார்
Leave a comment