(அருள்கார்க்கி)
“எனக்கு பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பாக முன்னர் பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால் மஸ்கெலிய பிரதேச சபையின் உருவாக்கத்துடன் நாம் எமது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை யோசனையாக முன்வைத்தோம். எமது மஸ்கெலியா பிரதேசமானது பாதை, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களில் பாரிய பின்னடைவை கொண்டதாகும். ஆனால் தற்போது அபிவிருத்திக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இம்முறை வரவு – செலவுத் திட்ட உருவாக்கத்துக்கு எமது பிரதேசங்களில் பிரதேச சபையால் மக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டது. நாம் எமது பிரிவை முன்னிலைப்படுத்தி யோசனைகளை முன்வைத்துள்ளோம். அவை உள்வாங்கப்படுமா என்பது இதுவரை எனக்கு தெரியாவிட்டாலும் எமது பங்களிப்பை நாம் வழங்கியுள்ளோம்” என்று மரக்கறி வர்த்தகர் திருமதி.கோகிலா (47) தெரிவித்தார்.
மஸ்கெலிய பிதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வரவு – செலவுத் திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதா என்பதும், எவ்வாறான முன்னேற்றங்கள் கடந்த காலத்தை ஒப்பிடும் போது ஏற்பட்டுள்ளது என்பதும் இங்கு ஆராயப்படும் விடயங்களாகும்.
பிரதேச சபைகளின் ஆயுட்காலம் முடியும் தருவாயில் இவ்வருடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டமானது இப்பிரதேச சபையின் இறுதி வரவு – செலவுத் திட்டமாகும். அந்தவகையில் Transparency International Sri Lanka அமைப்பினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக புதிய வரவு – செலவுத் திட்ட உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் கவனம் செலுத்தி இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். மேலும் 2023ஆம் ஆண்டுக்கான திட்டமிடலில் பல குறைபாடுகள் காணப்பட்டாலும் சில முன்னேற்றங்களும் காணப்படுகின்றன.
இந்த வரவு – செலவுத் திட்ட உருவாக்கத்தில் மக்கள் அமைப்புக்கள் தமது யோசனைகளை எவ்வாறு முன்வைத்திருக்கின்றன என்று ஆராயும் நோக்கில் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு இருக்கும் பொது மக்கள் அமைப்புக்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் மஸ்கெலிய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியான திரு. எஸ்.பரமேஸ்வரனிடம் வினவியபோது “நாம் இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகின்றோம். இப்பிரதேச சபை உருவாக்கப்பட முன்னர் அம்பகமுவ பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழேயே காணப்பட்டது. அதன் போது எமக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் போதுமான அளவு முன்னெடுக்கப்படவில்லை. பல்வேறு தேவைகள் இப்பிரதேசத்தில் காணப்பட்டாலும் வளப்பகிர்வில் எமக்கு பாரபட்சம் காட்டப்பட்டது.
மேலும் மஸ்கெலிய பிரதேச சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் சிறந்த வாய்ப்புகள் அமைந்தன. ஆரம்பகாலத்தில் இப்பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் உருவாக்குதல் தொடர்பாக எமக்கு போதிய விடய அறிவு இருக்கவில்லை. எனினும் பின்னர் நாம் பிரதேச சபையுடன் தொடர்ந்து இணைந்து பாதீடு உருவாக்கத்தில் எமது பங்களிப்பை வழங்கினோம். 2023ஆம் ஆண்டு பாதீடு உருவாக்கத்தில் நாம் எமது ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளோம்” என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் “2023ஆம் ஆண்டு பாதீடு உருவாக்கத்தில் பெண்கள் வலுவூட்டல், போதைப்பொருள் ஒழிப்பு, பொது விளையாட்டு மைதானத்தை புனரமைப்புச் செய்தல் போன்ற யோசனைகளை நாம் சிவில் அமைப்புகள் சார்பாக முன்வைத்தோம். மேலும் கடந்த நவம்பர் 26, 27ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாதீடு உருவாக்க கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு விளையாட்டு ஊக்குவிப்பு, டெங்கு ஒழிப்பு, சிரமதானம், கல்விசார் அபிவிருத்திகள், உள்ளிட்ட விடயங்களுக்கான நிதி ஒதுக்கத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தினோம்.
மேலும் பொது நூலகத்தை மேம்படுத்த வேண்டிய செயற்றிட்டங்களை நாம் அழுத்தமாக முன்வைத்தோம். மஸ்கெலிய பொது நூலகத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்திச் செய்து டிஜிட்டல் முறையில் சேவைகளை வழங்குவதற்கு ஏற்ற விதத்தில் அவற்றை மேம்படுத்த வேண்டியுள்ளதை வலியுறுத்தினோம்” என்று கூறினார்.
எஸ். பரமேஸ்வரன் மஸ்கெலிய சென். ஜோசப் கல்லூரியின் அதிபர் என்பதுடன் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியுமாவார்.
அதேபோல் பிரவுன்ஸ்வீக் 320N கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் அமைப்பான பிரவுன்ஸ்வீக் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகளை நேர்காணல் செய்தபோது அவ்வமைப்பு 2023ஆம் ஆண்டுக்கான பாதீடு உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்திருந்தமை புலப்படுகின்றது.
அவ்வமைப்பின் செயலாளர் திரு.ரொபின்சன் தெரிப்பதாவது, “நாம் பிரவுன்ஸ்வீக் பிரிவை மையப்படுத்தி எமது ஆலோசனைகளை முன்வைத்தோம். குறிப்பாக இப்பிரதேசத்தில் கழிவகற்றல் ஒரு பிரச்சினையாக உள்ளது. அதனை முறையாக திட்டமிட வேண்டிய அவசியத்தை நாம் சபைக்கு முன்வைத்தோம். மேலும் இளைஞர்களை மையப்படுத்தி மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக நாம் பல்வேறு கலந்துரையாடல்களில் ஆலோசனைகளை முன்வைத்தோம்.
அதில் சுயதொழில் ஊக்குவிப்பு, வேலைவாய்ப்பு வழிகாட்டல்கள், மற்றும் பாடசாலை உயர்தர/சாதாரணதர மாணவர்களை மையப்படுத்திய அறிவூட்டல் வேலைத்திட்டங்கள், மற்றும் பெண்கள் விழிப்புணர்வு போன்ற விடயங்களையும் முன்வைத்தோம். மற்றும் சூழல் பாதுகாப்பு சார்ந்த விடயங்களான மர நடுகை, சிரமதானங்கள் முதலிய விடயங்களையும் சபையின் பாதீட்டுக்கு முன்வைத்தோம்” என்று கூறினார்.
அதேபோல் மவுசாகலை 320ஐ கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த பொது அமைப்பான மவுசாகலை கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகளை நேர்காணல் செய்தபோது அவ்வமைப்பின் தலைவரான கே.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
“நாம் மவுசாகலை கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மவுசாகலை சனசமூக மன்றம் ஆகிய ஒன்றிணைந்த அமைப்புக்களின் மூலமாக எமது ஆலோசனைகளை நாம் முன்வைத்தோம். அதாவது மஸ்கெலிய பிரதேச சபையானது சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பிரதேச சபையாகும். அதேபோல் இப்பிரதேச சபையின் வருமானம் தொடர்பில் பல சவால்கள் காணப்படுகின்றன.
நாம் எமது அமைப்பினூடாக மஸ்கெலிய பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கு பல யோசனைகளை முன்வைத்தோம். அதாவது மவுசாகலை நீர்த்தேக்கத்தை மையப்படுத்தி உல்லாச படகு சேவை ஒன்றினை ஆரம்பிப்பதற்கு யோசனையை முன்வைத்தோம். மேலும் சிவனொளிபாத மலையை மையப்படுத்தி வருமானம் ஈட்டக்கூடிய பல திட்டங்கள் எம்மால் முன்வைக்கப்பட்டன.
இப்பிரதேசத்துக்கு வருகை தரும் உல்லாச பயணிகளின் மூலம் சிறந்த வருகையை இப்பிரதேச சபை ஈட்டிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன” என்று கூறினார்.
மேலும் “நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றினையும், விவசாய அபிவிருத்திக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கும் எமது ஆலோசனைகளை முன்வைத்தோம்” என்று கூறினார்.
பிரவுன்ஸ்வீக் பிரிவைச் சேர்ந்த தோட்ட தொழிலாளியான திரு.சுகுமார் (39) பாதீடு தொடர்பான கலந்துரையாடல்களில் பங்குபற்றியுள்ளார். அவரை நேர்காணல் செய்தபோது அவர் தெரிவித்ததாவது “எமது மஸ்கெலிய பிரதேசமானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
மஸ்கெலிய பிரதேச சபை உருவாக்கத்தின் பின்னர் சிறியளவிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த பணியில் நாமும் எமது பங்களிப்பை வழங்கமுடியும் ஏன்பதை நான் தெரிந்து கொண்டபோது எமது பிரதேசத்தை மையப்படுத்தி பிரதான வீதி அபிவிருத்தி, விளையாட்டு மைதானத்தை விஸ்தரித்தல், தோட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் பாதைகளை புனரமைத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றோம். இவை எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியமாகும் என்பது தெரியாவிட்டாலும் அதனை தொடர்ந்து அவதானித்துக் கொண்டு இருக்கின்றோம்.” என்று கூறினார்.
அதேபோல் 2023ஆம் ஆண்டுக்கான பாதீடு உருவாக்கத்தில் சீத்தகங்குல கிராம அபிவிருத்தி சங்கம், காந்தி சிரேஸ்ட பிரஜைகள் சங்கம், மானெலு கிராம அபிவிருத்தி சங்கம், மஸ்கெலியா கிராம அபிவிருத்தி சங்கம், பிரவுன்லோ ஐக்கிய கிராம அபிவிருத்தி சங்கம், மறே இந்து இளைஞர் மன்றம், மற்றும் குறிஞ்சி மக்கள் அபிவிருத்தி சங்கம் என்பன தமது யோசனைகளை முன்வைத்துள்ளன. மஸ்கெலிய பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு மேலும் பல மக்கள் அமைப்புக்கள் காணப்பட்டாலும் அவை எவ்வித பங்களிப்பையும் பாதீடு உருவாக்கத்திற்கு செய்யாதது ஒரு பாரிய குறைபாடாக உள்ளது.
இப்பாதீடு உருவாக்கம் தொடர்பாக மஸ்கெலிய பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரனிடம் இவ்விடயம் தொடர்பாக வினவியபோது அவர் கூறியதாவது:
நாம் ஆரம்ப காலத்தில் பாதீடு உருவாக்கத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். தொழிநுட்ப ஆலோசனை, மக்கள் கருத்துக்களை உள்ளடக்குதல், பாதீடு திட்டமிடல் போன்ற விடயப்பரப்புகளில் நாம் இன்று முன்னேற்றம் கண்டுள்ளோம். என்று கூறினார்.
மேலும் “நாம் பாதீடு உருவாக்கத்தில் மக்கள் அமைப்புகளின் பங்களிப்புகளை அதிகரிக்க பல்வேறு மட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். இதன் மூலம் அவர்களுக்கு தமது பிரிவுகளை மையப்படுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் போதிய பங்களிப்புக்களையும் ஆலோசனைகளையும் வழங்க முடிந்தது” என்று கூறினார்.
இப்பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர் கே.சுரேஸ்குமார் தெரிவித்ததாவது:
“வழமையை விடவும் 2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டமானது சற்று மேம்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அதன் அமைப்பிலும், விடயதானங்களிலும் பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. அவற்றை நான் பாராட்டியுள்ளேன். அதேசமயம் பிரதேச சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தோட்டங்களில் முன்னெடுப்பதற்கு பல சவால்கள் எமக்கு காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்திச் செய்ய ஆட்சியில் உள்ளவர்கள் இதுவரை எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. இது எம் அனைவருக்கும் உள்ள ஒரு சவாலாகும். மேலும் இம்முறை எமது பிரதேசங்களில் இருந்து மக்கள் கருத்துக்களை பாதீடு உருவாக்கத்துக்கு நாம் உள்ளடக்கியுள்ளோம்” என்றார்.
அதேபோல் இப்பிரதேச சபையின் தவிசாளர் ஜி.செம்பகவள்ளி; பாதீடு உருவாக்கம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோது, “நாம் இப்பாதீட்டை பல்வேறு மட்ட கலந்துரையாடல்களின் பின்னரே உருவாக்கி உள்ளோம். குறிப்பாக 20 மகளீர் அமைப்புகள், 10 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள், பிரஜாசக்தி நிலையங்கள், மீனவர் சபைகள், சபை உறுப்பினர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்புடனும் இப்பாதீடு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமான மக்கள் ஆலோசனைகள் தோட்டப்பகுதிகளில் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன” என்று கூறினார்.
இவற்றை தொகுத்து நோக்கும் போது இப்பாதீடு உருவாக்கத்தில் பல்வேறு மட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை எதிர்காலத்தில் சமூகமயப்படுத்துவது இப்பிரதேச சபையின் தேவையாகின்றது. மேலும் மக்கள் அமைப்புக்கள் தமது ஆலோசனைகளை மட்டும் வழங்காது அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களையும் கண்காணிப்புகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதனை இப்பிரதேச சபை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Leave a comment