(அருள் கார்க்கி)
மஸ்கெலிய பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வருடங்களை போலவே இந்த பாதீடும் அதிகமான செலவீனங்களை பூர்த்தி செய்யும் முகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வருமானங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களின் போதாமையை இம்முறை பாதீட்டிலும் காணக்கூடியதாக உள்ளது.
ஆளுங்கட்சியும் எதிரணிகளும் கடந்த கால அனுபவங்களினூடாக தரமான ஒரு பாதீட்டை உருவாக்கக்கூடிய திறமை இருந்தும், வருமான ரீதியாக அதனை சாத்தியமாக்கும் திட்டங்களை அவர்கள் பாதீட்டில் உள்ளடக்குவதில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
மட்டுப்படுத்தப்பட்ட வருமான மார்க்கங்கள் இப்பிரதேச சபையின் பிரதான பிரச்சினையாகும். இதனை பலரும் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகின்றனர். இச்சபையின் வருமானமானது பிரதான நகரங்களில் மட்டுமே தங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எனினும், மஸ்கெலியா, நல்லதண்ணி பிரதேசங்கள் சுற்றுலா ரீதியாக அபிவிருத்தி செய்யப்படக்கூடிய பிரதேசங்களாகும். அப்பிரதேசங்களை மையப்படுத்தி சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வருமானங்களை ஈட்டிக்கொள்ள முடியும். இந்த திட்டங்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் அமைப்புக்கள் ஆலோசனைகளாக முன்வைத்துள்ளன.
முக்கியமாக, மவுசாகலை நீர்த்தேக்கமானது இப்பிரதேசத்துக்கான பாரியதொரு வளமாகும். இது நீர் மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்டாலும், பாரிய பிரதேசங்களை இணைக்கும் ஒரு நீர்நிலையாக காணப்படுகிறது. இதனை மையப்படுத்தி போக்குவரத்து படகுச் சேவையொன்றை ஆரம்பிக்க முடியும் என்பது பலராலும் குறிப்பிடப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மூலம் பிரதேச சபை வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும். அதேபோல் உல்லாச படகுச் சேவையையும் இப்பிரதேசத்தில் உருவாக்குவதன் மூலம் நுவரெலியா கிரகெரி வாவி போன்றொரு சுற்றுலா மையமாக மவுசாகலை நீர்த்தேக்கத்தை உருவாக்க முடியும்.
மவுசாகலை நீர்த்தேக்க உல்லாச படகுச் சேவை தொடர்பாக பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் சபை அமர்வுகளில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அந்த வகையில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் பி.ஆனந்தன் இதனை பல முறை சபையில் முன்வைத்ததாக கூறுகிறார். இதன் மூலம் சபையின் வருமானம் அதிகரிக்கும் என்பதும் இப்பிரதேசம் ஒரு சுற்றுலா மையமாக அபிவிருத்தி அடையும் என்பதும் அவரின் கருத்தாகும்.
சிவனொளிபாதமலை பருவ காலங்களில் அதிகமான வெளிப் பிரதேசத்தவர்கள் புனித யாத்திரையாக மஸ்கெலிய பிரதேசத்துக்கு வருகை தருகின்றனர். இவர்களுக்கு இப்பிரதேசத்தில் வேறு எவ்விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை.
எனவே, மவுசாகலை வாவியை அதற்கான சிறந்த இடமாக மாற்றியமைத்து வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.
இவ்விடயங்கள் தொடர்பாக பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஜி.செம்பகவள்ளியிடம் வினவியபோது,
“படகுச்சேவை திட்டமானது எமது சபைக்கு வருமானத்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த திட்டமாகும். சபையில் பல உறுப்பினர்கள் இதனை முன்வைத்துள்ளனர்.
எனினும், அதனை சாத்தியமாக்க நீர்த்தேக்கம் அமைந்துள்ள பிரதேசம் இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எமக்கு சட்ட சிக்கல் காணப்படுகிறது. நாம் பல முறை வினவியும் அதனை பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் வழங்குவதை மறுக்கின்றனர்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
“இந்த பிரச்சினை இவ்வாறிருப்பினும் நாம் அதனை அமைச்சு மட்டத்தில் சாத்தியமாக்குவதற்கு முயற்சித்து வருகிறோம். அதன் காரணமாக அதனை 2023ஆம் ஆண்டு பாதீட்டில் உள்ளடக்க முடியாமல் போனது” என்று தெரிவித்தார்.
மேலும், சந்தை கட்டட தொகுதித் திட்டம் கடந்த காலங்களில் இழுபறியில் இருந்தது. இது இப்பிரதேச சபையின் வருமானத்துக்கு முக்கியமானதொரு திட்டமாகும். அது அமைந்துள்ள இடம் காணி உரித்து பிரதேச செயலகத்துக்குரியது என்பதால் அதனை விடுவித்துக்கொள்ள அதிகமான காலம் தேவைப்பட்டது.
இவ்வாறான காரணங்களும் சந்தை கட்டட நிர்மாணத்துக்கு தேவையான நிதியை திரட்டிக்கொள்வதும் சிரமமாக இருப்பதால் இத்திட்டம் தாமதிக்கப்பட்டுள்ளது” என்று தவிசாளர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு பாதீட்டில் எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானமாக 240,185,502.69 ரூபா கணிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையில் வரிகள், கூலி, வியாபார அனுமதிப்பத்திர சேவைக்கான கட்டணம், தண்டப்பணம் உள்ளிட்டவற்றுடன் மானியமும் மூலதன வருமானமும் பாரிய தொகையாக எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக புதிய திட்டங்கள் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான யோசனைகள் கடந்த 2022ஆம் ஆண்டு பாதீட்டிலும் முன்வைக்கப்பட்டபோது அவை நடைமுறை சாத்தியமாகவில்லை.
2022ஆம் ஆண்டு பாதீட்டிலும் மானியத்தை எதிர்பார்த்து திட்டமிடல் செய்திருந்தமையுடன் இம்முறையும் அத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதே ஒழிய புதிய திட்டங்கள் முன்மொழியப்படவில்லை.
2022ஆம் ஆண்டு மஸ்கெலிய பிரதேச சபையின் மொத்த செலவீனமாக 206,050,289.71 ரூபாவாக காணப்பட்டது. 2023ஆம் ஆண்டு அத்தொகை 240,177,361.73 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த உயர்வு சாதாரணமான ஒன்றாக இருப்பினும், அதற்கேற்ற வருமான திட்டங்களை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். அதனை 2023ஆம் ஆண்டு பாதீட்டிலும் குறைபடவே காணமுடிகிறது.
மேலும், சிவனொளிபாத மலை யாத்திரிகர்களை மையப்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, யாத்திரிகர்களுக்கான உணவு வழங்கல், வாகன தரிப்பிடம், கழிவறை, தங்குமிடங்கள் என்பவற்றுக்கு அதிக கேள்வி நிலவுகிறது.
நல்லதண்ணி நகரத்தை மையப்படுத்தி இந்த விடயங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பிரதேச சபையால் வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும். அதேபோல் இப்பிரதேச சபையின் நன்மதிப்பையும் ஏனைய சமூகத்தவர்களுக்கு மத்தியில் உயர்த்திக்கொள்ள முடியும் என்பதும் முக்கியமானது.
2023ஆம் ஆண்டுக்கான பாதீடு யோசனைகளை உறுப்பினர்களும் மக்கள் அமைப்புக்களும் முன்வைத்துள்ளனர். அது வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும், ஒரு பிரதேச சபையின் ஆளுகைக்கும் நிதி வரம்புக்கும் உட்பட்டு திட்டங்களை முன்மொழிவது அவசியமாகும். அந்த வகையில் உறுப்பினர்களும் இந்த விடயத்தில் போதிய தெளிவற்றவர்களாகவே உள்ளனர். அவர்கள் முன்மொழியும் திட்டங்கள் சேவைகளை அடிப்படையாக கொண்டதாக மட்டுமே உள்ளது. இவர்களின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் எவ்வித வருமானத்தையும் ஈட்டுவனவாக அமையவில்லை என்பதும் ஒரு பாரிய குறைபாடாகும்.
குறிப்பாக, கொங்க்ரீட் பாதை, மைதானம், படிக்கட்டுக்கள் அமைத்தல், பாடசாலை கட்டடம், மின் விளக்குகள் போன்ற விடயங்களிலேயே அதிக கவனம் செலுத்துகின்றமை இம்முறை பாதீட்டில் காணமுடிகிறது.
இவற்றுக்கு இவர்கள் முன்மொழியும் நிதியானது இப்பிரதேச சபையின் இயலுமையை விடவும் அதிகமாக காணப்படுகிறது.
ஆனால், எந்தவொரு உறுப்பினரும் இந்த நிதியை திரட்டிக்கொள்ளும் வழிகளை பாதீட்டில் முன்மொழியவில்லை.
மக்கள் அமைப்புக்களை பொருத்தவரையில் அவர்களும் பல்வேறு பிரேரணைகளை முன்வைத்திருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை வருமானம் ஈட்டுவதை அடிப்படையாக கொண்டவையல்ல. மாறாக, பிரதேச சபையின் நிதியில் செலவுசெய்து முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்களாகவே உள்ளன. இவை மக்கள் அமைப்புக்களின் பாதீடு தொடர்பான தெளிவின்மையையும் பிரதேச சபையின் வருமானம் உள்ளிட்ட விடயங்களின் விடய அறிவு போதாமையையுமே எடுத்துக்காட்டுகிறது.
பிரவுன்ஸ்வீக் கிராமிய அபிவிருத்திச் சங்கம் (பிரவுன்ஸ்வீக் 320M) சில முற்போக்கான யோசனைகளை முன்வைத்துள்ளது. அதில் வாகன புகை பரிசோதனை நிலையமொன்றை நிறுவுதல், கழிவகற்றல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை சிறியளவிலான வருமானத்தை சபைக்கு ஈட்டிக்கொடுக்கும் திட்டங்களாகும். ஏனைய மக்கள் அமைப்புக்கள் பெரும்பாலும் முன்வைத்தவை அனைத்தும் பாரிய நிதியில் தங்கியிருப்பவையாகும். இது தெளிவின்மையால் இம்முறையும் பாதீட்டில் விடப்பட்ட ஒரு குறைபாடாகும்.
குறைந்தளவிலான வருமான மார்க்கங்களை வைத்துக்கொண்டு நலன்புரி திட்டங்களை அதிகமாக முன்மொழிவது ஆரோக்கியமான பாதீடாக அமையாது.
கடந்த மூன்று வருட பாதீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நலன்புரி செலவீனங்கள் வருடாவருடம் அதிகரித்துச் செல்கின்றன.
· 2021 – 94,501.00.68
· 2022 – 2,712,710.00
· 2023 – 2,882,560.00
என்றவாறாக நலன்புரி செலவீனங்கள் அதிகரித்துச் செல்கின்றன. இதனை ஈடுசெய்யும் விதமாக வருமானத்தை அதிகரிப்பது கட்டாயம். ஆனால், வருமானத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களின் போதாமை காணப்படுகிறது.
இவ்விடயங்களை பிரதேச சபையின் செயலாளர் எஸ். ராஜவீரனிடம் வினவியபோது,
“2023ஆம் ஆண்டு பாதீட்டை நாம் திறம்பட உருவாக்கியுள்ளதாக நம்புகின்றேன். மேலும், வருமான அதிகரிப்புக்கு பல திட்டங்களை உறுப்பினர்கள் முன்வைக்கின்றனர். ஆனால், அதனை நடைமுறை சாத்தியமாக்கும் பொறுப்பு எமக்கு மட்டுமே சுமத்தப்படுகிறது.
மவுசாகலை நீர்த்தேக்க படகுத்திட்டம், சந்தை கட்டடத்தொகுதி, மின் மயானம், வாராந்த சந்தை, கழிவு வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாம் இம்முறை பாதீட்டில் உள்ளடக்கியுள்ளோம்.
கடந்த வருடங்களிலும் இத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்களும் மக்கள் அமைப்புக்களும் வழங்கிய பிரேரணைகளின் அடிப்படையிலேயே இவை பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
வெறும் மானிய தொகையை மட்டுமே நம்பி பாதீடு திட்டமிடல்களை வடிவமைப்பது அபத்தமானது என்பது உணரப்பட்டு, புதிய வருடத்தில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில் நேரடி அரச மானியங்கள் கிடைப்பது மிகவும் அரிது. எனவே, சாத்தியமான முறையில் மஸ்கெலிய பிரதேச சபையினை முன்கொண்டு செல்வதற்கு ஒரு மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியமாகும்.
Leave a comment