கேஷாயினி
இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் பெண்களது வகிபாகமானது உலகளாவிய ரீதியில் ஒப்பீட்டளவில் ஓரளவாக காணப்படுகின்ற போதிலும், தெற்காசிய நாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகளை நோக்கும் போது மிகவும் குறைவானதொரு நிலையிலேயே காணப்படுகிறது.
1931ஆம் ஆண்டு முதல் வாக்களிப்பதற்கான உரிமையை பெண்கள் பெற்றுக்கொண்டுள்ள போதிலும், ஏறத்தாழ நூற்றாண்டுகளை கடந்துள்ள போதிலும், பங்களிப்பென்பது மிகவும் தாழ் நிலையிலேயே காணப்படுகின்றது.
1990இல் 25ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் சட்ட திருத்தத்துக்கமைய 18-35 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களது வகிபாகத்துக்காக 40 சதவீத ஒதுக்கீடு கிடைக்கப்பட்டது.
ஆயினும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையானது ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. 1997இல் பொதுஜன முன்னணியினால் அரசியல் வரைபொன்று முன்வைக்கப்பட்டது.
இதில் உள்ளூராட்சி மட்ட நியமனங்களில் பெண்களுக்காக 25 சதவீத ஒதுக்கீட்டினை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. அந்த வழிமுறையானது பல்வேறுபட்ட விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்ட போதிலும், பெண்களது பிரதிநிதித்துவத்தை விளிப்பதற்கானதொரு தளத்தினை உருவாக்கிக்கொடுத்திருந்தது.
எனினும், இத்தகைய 25 சதவீத ஒதுக்கீட்டினை நிரப்புவதற்கு தம்மிடம் போதியளவு பெண் வேட்பாளர்களை உள்வாங்குவதற்கான இயலாமை உள்ளதாக கூறி பல அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன.
இதனால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாக 2000ஆம் ஆண்டு ஆவணி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புசார் முன்மொழிவுகளிலிருந்து இந்த ஒதுக்கீடு குறித்த வாசகம் மீளப்பெறப்பட்டது.
2001ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 25 சதவீத ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் பெண்களுக்கான தனியான தேர்தல் விஞ்ஞாபன பிரசாரத்தினை முன்னெடுத்தது.
எனினும் இந்த வாக்குறுதியானது உள்ளூராட்சிக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்ததுடன், தெளிவானதாக அமைந்திருக்கவில்லை. இந்த கட்சியும் அதிகாரத்துக்கு வந்து மூன்று வருடங்களுக்குள் கலைக்கப்பட்டமையினால் இது தொடர்பிலான முன்னேற்றங்கள் ஏற்பட வழிகோழவில்லை.
சட்ட வரையறை மற்றும் உட்கிடைத்தன்மை 2017இல் இலங்கையின் புதிய கலப்பு உறுப்பினர் விகிதாசார முறைமையின் (Mixed Proportional Representation System) கீழ் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் ஏற்பாடுகள் சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டன.
· வேட்புமனுப் பத்திரத்தில் அல்லது தொகுதிவாரியான பட்டியலில் குறைந்தது 10 சதவீதமான பெண்கள் உள்வாங்கப்பட்டிருத்தல் வேண்டும்.
· சுயேச்சை குழுக்கள் அல்லது அரசியல் கட்சிகளின் விகிதாசாரப் பட்டியலாகவுள்ள மேலதிக வேட்பு மனுக்களில் குறைந்தது 50 சதவீதமான பெண் வேட்பாளர்கள் உள்வாங்கப்பட்டிருத்தல் வேண்டும்.
இந்த ஒதுக்கீட்டு அறிமுகத்தினால் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களது வகிபாகத்தில் பாரியதொரு மாற்றம் எதிர்வுகூறப்பட்டிருந்தது. அதாவது 1.8 வீதத்திலிருந்து 25 வீதமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
திருத்தச்சட்டத்துக்கமைய பொதுப்பட்டியலில் பெண்களது நியமங்களுக்கு தடையேதும் விதிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, உள்ளூராட்சி மட்டத்தில் பெண்களது பிரதிநிதித்துவம் 25 வீதத்திலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 வீதத்தினை தாண்டியும் பெண்களது வகிபாகம் அமையலாம் என எதிர்வுகூறப்பட்டிருந்த போதிலும், 23 சதவீதம் வரை பெண்களது உள்ளூர் மட்ட பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான திருப்புமுனையாக இது அமைந்திருந்தது.
வர்த்தமானி 2061/42-9இல் வெளியிடப்பட்டிருந்த தரவுகளுக்கமைய தெரிவுசெய்யப்பட்ட 8,325 உறுப்பினர்களுள் 1,919 பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இது மொத்த தொகையில் 23 வீதமாகும்.
பால்நிலை குறித்த பாராளுமன்ற மேற்பார்வைக்குழு
2015இல் பாராளுமன்ற தீர்மானத்தின் மூலம் 16 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் (Sectorial Oversight Committee – SOC) அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் நிபுணத்துவம் மற்றும் அவர்களது விருப்புக்களின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற சட்டவாக்கங்களின் அவசியம், சூழ்நிலைகள், பிரதிபலன் என்பவற்றினை பகுப்பாய்வு செய்து, மதிப்பீட்டுக்குட்படுத்தி பாராளுமன்றத்துக்கு துணைபுரிவதற்கென்று இக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் “பெண்கள் மற்றும் பால்நிலை” பற்றிய குழுவொன்றும் (Sectorial Oversight Committee for Women and Gender- SOCWG) நியமிக்கப்பட்டது.
இக்குழு நியமிக்கப்பட்டபோது இக்குழுவில் தனித்து பெண்களை மட்டும் உள்வாங்குவதற்கு 20 பெண் உறுப்பினர்கள் இல்லாமையினால் ஆண் உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டனர்.
பெண்களது அரசியல் பங்குபற்றுதலுக்கு தடையான காரணிகள்
2018இல் பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக ஆட்சி வலுப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் பெண்கள் தமது அரசியல் பங்குபற்றுதலுக்கு பின்வரும் விடயங்கள் தடையாகவுள்ளதாக அடையாளம் காணப்பட்டிருந்தது.
· பெண் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த சமூகத்தின் எதிர்மறையான கண்ணோட்டம்
· ஊடகங்களின் பால்நிலை சார் கூருணர்வற்ற ஊடகச் செயற்பாடுகள் மற்றும் மாறாநிலைப் படிமங்கள் பெண் பிரதிநிதிகளை பின்வாங்கச் செய்கின்ற ஊடகச்செயற்பாடுகள்
· தேர்தல்கள் மற்றும் சபைகளை மேற்பார்வை செய்கின்ற ஆணாதிக்க கட்சி அரசியல் மற்றும் ஆண் மேலாதிக்க கட்டமைப்புக்கள்
· தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு எதிராக பரவலாகக் காணப்படுகின்ற வன்முறைகள் மற்றும் இவ்வன்முறைகளுக்கு தண்டனை வழங்கப்படாத விடுபாட்டுரிமைக் கலாசாரம்.
· பெண்களின் குடும்ப கடமைகள் மற்றும் அரசியல் என இரட்டை வகிபாகம்
· பெண்களுக்குள்ள பொருளாதார வளங்களுக்கான மட்டுப்படுத்தப்படல்கள்
· சக ஆண் உறுப்பினர்களுடைய மனநிலை மற்றும் பால்நிலைக் கூருணர்வின்றிய செயற்பாடுகள்
· பெண்களின் அரசியல் பிரவேசங்களை தடுக்கின்ற அல்லது மறுக்கின்ற மத, பாரம்பரிய கலாசார தடைகள்
· ஆண் இயங்குதளங்களை உள்வாங்குகின்ற செயற்பாடுகள் ( உதாரணமாக நள்ளிரவு வரை நீளுகின்ற கட்சி கூட்டங்கள்)
· அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூகத்துக்குமான இடைவெளி மேற்கூறிய காரணிகளுடன் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை வரையறுத்த உள்ளூராட்சி அதிகார சபை சட்டங்கள், அரசியல் கட்டமைப்பில் பெண்கள் எதிர்கொள்கின்ற நடைமுறைசார் விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவில்லை என்பது மிகவும் கவனிக்கப்படவேண்டியதொரு விடயமாகும்.
Leave a comment