(அருள் கார்க்கி)
மஸ்கெலிய பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசமானது இயற்கை எழில் நிறைந்த, சுற்றுலாத்தலங்கள் அதிகமாக காணப்படும் ஒரு வலயமாகும்.
இப்பிரதேச சபையின் வருமானத்தில் சிவனொளிபாத மலை மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கம் என்பன பிரதான இடத்தை வகிக்கின்றன.
மஸ்கெலிய பிரதேச சபையின் முதன்மையான வருமானம் சிவனொளிபாத மலையை மையப்படுத்தி காணப்படும் அதேவேளை, மவுசாகலை நீர்த்தேக்கத்தின் படகுச் சேவை திட்டமானது நீண்ட காலமாக இழுபறியில் உள்ளது.
இது இப்பிரதேச சபையின் பாரிய வருமானத்தை பாதிக்கும் ஒரு திட்டமென்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இந்த மவுசாகலை படகுச் சேவை திட்டத்தை சபையின் பிரதான வருமான மார்க்கமாக உருவாக்க முடியும் என்பது சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாகவும் உள்ளது.
2019ஆம் ஆண்டு மஸ்கெலிய பிரதேச சபையால் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் உல்லாச படகுச் சேவை திட்டத்துக்கான செயற்றிட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின் உள்ளடக்கங்களின்படி, இச்செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதானமாக தேவைப்படும் இடமானது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு காணப்பட்டாலும், அதற்கான எவ்வித உறுதிப்பத்திரங்களும் (ஒப்பனை) பிரதேச சபையிடம் காணப்படவில்லை.
எனவே, படகுச் சேவை ஆரம்பிக்கும் இடத்தை தெரிவுசெய்து, அப்பிரதேசத்துக்கான உறுதிப்பத்திரத்தை அம்பகமுவ பிரதேச செயலகத்திடம் முதற்கட்டமாக பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை பிரதேச சபைக்கு காணப்படுகிறது.
மேலும், இப்படகுச் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கான பிரதான நோக்கங்களாக சபையின் வருமானத்தை அதிகரித்தல், பிரதேசத்தில் காணப்படும் இயற்கை வளங்களை பயன்படுத்தல் மற்றும் பிரதேசத்தில் காணப்படும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல் என்பவற்றை கூறலாம்.
இதற்கு முக்கிய காரணம், மஸ்கெலிய நகரை அண்மித்த பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கான எவ்வித உட்கட்டமைப்புகளும் இல்லை என்பதேயாகும்.
இந்த படகுச் சேவை திட்டத்தினை அபிவிருத்தி செய்வதன் பின்னணியில் மேலும் பல சாதகமான அம்சங்கள் காணப்படுகின்றன. அதாவது மவுசாகலை நீர்த்தேக்கத்தை அண்மித்து, சுற்றுலா பயணிகளுக்கான ஓய்விடம் ஒன்றை அமைப்பதனூடாக நல்லதண்ணி பிரதேசத்துக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க முடியும்.
அத்துடன் இதன் மூலம் நகர அபிவிருத்தியை திட்டமிடவும், பிரதேசத்தில் பல புதிய தொழில்களை உருவாக்கவும் முடியும்.
மேலும், நிதி பற்றாக்குறையால் மஸ்கெலிய நகரானது உட்கட்டமைப்பு ரீதியாக இன்னும் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
எனவே, மவுசாகலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக நகரின் உட்கட்டமைப்பையும் கணிசமாக அபிவிருத்தி செய்ய முடியும் என்பது சபையின் எதிர்த்தரப்பு உறுப்பினர் பி.ஆனந்தனின் கருத்தாகும்.
மேலும், பல எதிரணி உறுப்பினர்கள் இதே விடயத்தை சபையில் பல முறை விவாதித்துள்ளனர். ஆனால், இதற்கான திட்ட முன்மொழிவை எதிரணியினர் எவரும் எழுத்து மூலம் சபையில் சமர்ப்பிக்கவில்லை.
இது ஒரு வெற்றிடமாக உள்ளது. ஆனால், சபையின் ஆளுங்கட்சி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளமை உண்மையாகும்.
2019.06.21 என திகதியிடப்பட்ட கடிதம் மூலம் சபையின் தவிசாளர் இத்திட்டத்துக்கு அனுமதி கோரி, அப்போதைய மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சபையின் வருமானம், சிவனொளிபாத மலை அபிவிருத்தி போன்ற பல விடயங்களை உள்ளடக்கி இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, மவுசாகலை நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 3 சதுர கிலோ மீற்றர் அளவில் பழைய நகரம் ஒதுக்கப்பட்டு, அதில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபைக்கு தேவையான வருமானத்தை பெற்றுக்கொள்ள போதிய வழியில்லை என்கிற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில் மின்சக்தி, எரிசக்தி, வர்த்தக மேம்பாட்டு அமைச்சின் ரவி கருணாநாயக்கவினது இணைப்புச் செயலாளரால் 2019.08.13 என திகதியிடப்பட்ட கடிதம் மூலம் மின்வலு அமைச்சின் பதில் பணிப்பாளருக்கு இவ்விடயத்தை ஆராயுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த கடிதத்தின் பிரதி மஸ்கெலிய பிரதேச சபையின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்துக்கு பதிலளிக்கும் முகமாக, இலங்கை மின்சார சபையினால் 2019.09.10 என திகதியிடப்பட்ட கடிதம் மூலம் மின்சக்தி அமைச்சின் இணை செயலாளருக்கு விளக்கக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தின் மூலம் மவுசாகலை நீர்மின் திட்டத்தின் பாதுகாப்பு காரணங்களால் கோரிக்கைக்குரிய விடயமான படகுச் சேவை திட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்பது மின்சார சபையின் நிலைப்பாடாகும்.
இதனை தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக மஸ்கெலிய பிரதேச சபையால் எவ்வித திட்டங்களும் குறித்த அறிக்கையிலோ அமைச்சுக்கு சமர்ப்பித்த கடிதங்களிலோ தெளிவாக இல்லை என்பது ஒரு பிரதான குறைபாடாகும்.
2019.12.27 என திகதியிடப்பட்ட கடிதமொன்றில் பிரதேச சபையின் தவிசாளரால் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனுமதி தொடர்பில் குறிப்பிடப்பட்டு, அக்கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நேரடியாக அப்போதைய ஜனாதிபதிக்கு அனுமதிக்கடிதம் அனுப்புவதற்கு முன்னர் பின்பற்றப்பட வேண்டிய தொழில்நுட்ப பரிசோதனை குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த திட்டம் தொடர்பாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் பி.ஆனந்தன் கூறுகையில்,
படகுச்சேவை திட்டத்துக்கு ஆளுங்கட்சி உடன்பட்டாலும், அத்திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்ப ரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என தனது வாதக் கருத்தினை முன்வைத்துள்ளார்.
அத்துடன் உல்லாச படகுச் சேவை ஆரம்பிப்பதற்கு தெரிவுசெய்யப்பட்ட இடத்துக்கும் மின்சார சபையின் தொழில்நுட்ப அலகு அமைந்துள்ள இடத்துக்கும் சிறிதளவு தூர இடைவெளியே உள்ளது. எனவே, படகுச் சேவையினை நடைமுறைப்படுத்தும்போது அதற்கான வரையறை மின்சார சபையால் வழங்கப்படும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சபையின் தவிசாளரான ஜி.செம்பகவள்ளி கருத்துரைக்கையில்,
இத்திட்டம் சபைக்கான வருமானத்துக்கு மிகவும் அவசியமானதாகும். எனவே, எவ்வாறாயினும் இந்த படகுச் சேவை திட்டத்தை உரியவாறு அனுமதி பெற்று நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளதென கூறுகிறார்.
மேலும், தமக்கான படகுச் சேவை திட்டத்துக்கு அனுமதி வழங்காத இலங்கை மின்சார சபையானது சமீபத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒருவருக்கு படகுச் சேவையொன்றை நடைமுறைப்படுத்த பிறிதொரு பிரதேசத்தில் அனுமதி வழங்கியுள்ளதாகவும், பிரதேச சபையின் எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
இத்திட்டத்துக்கான முயற்சிகளை 2019ஆம் ஆண்டு தொடக்கம் தான் மேற்கொண்டு வருவதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடயங்கள் தொடர்பாக மஸ்கெலிய பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரனிடம் வினவியபோது,
படகுச் சேவை திட்டத்துக்கான முயற்சிகளை நாம் சபையினூடாக 2019ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகின்றோம்.
இத்திட்டத்துக்கான அனுமதியினை பெறுவதில் காணப்படும் சிக்கலால் படகுச் சேவையினை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறது. இதற்கான ஆரம்பகட்ட செலவாக 40 மில்லியன் ரூபாயை நாம் அப்போது (2019) கணிப்பிட்டிருந்தோம்.
சிவனொளிபாத மலை பருவ காலங்களில் சுமார் 4 படகுகள் எம்மிடம் இருந்தால் கூட நாளொன்றுக்கு 4 தொடக்கம் 8 இலட்சம் ரூபாய் வரை வருமானம் உழைக்க முடியும். அதேபோல் இதனை தனியாருடன் இணைந்து நடத்தினால், குறிப்பிட்ட சதவீத வருமானமொன்றை ஒப்பந்த அடிப்படையில் சபைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
இவ்விடயங்களை தொகுத்து நோக்கும்போது இப்படகுச் சேவை திட்டமானது சபைக்கான வருமானத்துக்கு மிக முக்கியமான ஒரு விடயமாகும். ஆனால், இதனை நடைமுறைப்படுத்த போதுமான முயற்சிகள் பிரதேச சபையால் முன்னெடுக்கப்படவில்லை.
மின்சக்தி அமைச்சுக்கு அனுமதி கோரப்பட்டிருந்தாலும், அதற்கான தெளிவான நியாயப்படுத்தல்கள் சபையின் அறிக்கையினூடாக முன்வைக்கப்படாமையால் இத்திட்டத்துக்கான அனுமதி சாத்தியமற்றதாகியுள்ளது.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் இத்திட்டத்தை பிரதேச சபையானது தீவிரமாக கையாளவில்லை என்பது தெளிவாக புலப்படுகிறது.
அதில் முக்கியமான விடயம், இத்திட்டத்துக்கென ஒரு தெளிவான அறிக்கையை துறைசார் நிபுணர் குழுவை கொண்டு உருவாக்கவில்லை. ஏனைய விடயங்களுக்கு ஒதுக்கும் நிதியில் ஒரு சிறு தொகையை பாதீட்டில் இத்திட்டத்துக்கான ஆரம்பகட்ட பணிகளுக்கு ஒதுக்கியிருக்கலாம்.
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடிப்படையாக கொண்டு பாதீடும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டிய தேவை மஸ்கெலிய பிரதேச சபைக்கு உள்ளதென்பது இதனூடாக தெளிவாகிறது.
Leave a comment