200மில்லியன் ரூபாவுக்கும்
அதிகமான நிதி எங்கே?
‘மஹபொல நம்பிக்கை நிதியம் மௌனம்: பொருளாதார நெருக்கடியால் மஹாபொல ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் திண்டாட்டம்’
‘வாழ்வாதரச் செலவுகள் இப்போது அதிகமாகி இருக்கிறது. எமக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் மஹபொல பணமான 5000 ரூபா வெறும் ஒரு கண் துடைப்புத்;தான். நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எம்மை வெகுவாக பாதித்துள்ளது. அந்தத் தொகையை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும்’ என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் பெறியியல் கற்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கும் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த யதுர்ஷன் என்ற மாணவன் தெரிவித்தார்.
அதேபோன்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இரண்டாம் வருடத்தில் கல்வியைத் தொடர்ந்து வரும், புத்தளம் பிரதேசத்தினைச் சேர்ந்த நிஷ்பா என்ற மாணவி ‘எங்களுக்கு கிடைக்கும் பணம் போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது மிக மிக குறைவான தொகை. அதனை அதிகரிக்குமாறு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் தற்போது வரையில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக இல்லை’ என்றார்.
1981 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மஹாபொலஊக்கத்தொகையைப் பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் நிலைமைகளும் கோரிக்கைகளும் மேற்கண்டவாறு தொடர்கதையாகவே இருக்கின்றது.
மஹபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதியம், வருமானம் குறைந்த குடும்பப் பின்னணியை உடைய மாணவர்கள் தமது உயர் கல்வியை பல்கலைக்கழத்தில் தொடரும் காலத்தில் அவர்களுக்காக வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கான நிதியைக் கையாளும் நிறுவனமாகின்றது.
இந்த, மஹபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதியம் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக மௌனம் காத்துவருகின்றது. இந்நிலைக்கு குறித்த நிதியத்திற்கான நிதியளிப்புக்கள் போதைமையாக உள்ளதா என்பது தொடர்பில் கட்டுரையாளரால் ஆராயப்பட்டது.
அதன்போது, மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளமையே காரணமாக இருப்பதாக அந்நிதியத்தில் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரமுள்ள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவருடைய கூற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவாது (ஊழுPநு) மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தியத்தில் நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளது என்பதை தனது ஆய்வில் கண்றிந்துள்ளது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னாள் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி.சரித்த ஹேரத் ‘இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கமைய என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டபோது கணக்கீட்டில் பல்வேறு குழறுபடிகள் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
அத்துடன், ‘குறித்த கணக்கெடுப்புக் கருத்துரைக்கான அடிப்படையை வழங்குவதன் நிமித்தம் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணக்காய்வுக்கான சாட்சியங்கள் போதுமானவை மற்றும் பொருத்தமானவைகளென நான் நம்புகின்றேன். ஆகவே கணக்கில் காட்டப்பட வேண்டிய நிதிக்கு குறித்த தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும்’ என்று தெரிவித்தார்.
அதேநேரம், மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் காணப்படுகின்ற நிதி மோடிகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக கட்டுரையாளரால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்களின் போதும் கணக்காய்வு அறிக்கையினை அடிப்படையாக வைத்து குறித்த நிதி மோசடி விடயம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில், மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் முழு உரிமையுடைய துணைக் கம்பனிகளான நெஷனல் வெல்த் கோப்பரேஷன் மற்றும் நெட்வெல்த் சிகியுரிட்டீஸ் ஆகிய கம்பனிகளுடன் ஒன்றிணைந்த நிதிக் கூற்றுக்கள் 2013 ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டு வரை தயாரிக்கப்பட்டு கணக்காய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அதற்கான காரணத்தினை மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம் வெளிப்படுத்துவதற்கு தயாராக இருக்கவில்லை.
அத்துடன், 2005 ஆம் ஆண்டில் 12 மில்லியன் (12,460,179ரூபா) ரூபாவு பெறுமதியென கணக்கு வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை நிதியத்திற்குச் சொந்தமான மாலபே இல் அமைந்துள்ள 25 ஏக்கர் காணியை மீளாய்வாண்டிலும் நிகழ்காலப் பெறுமதிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை அதற்கான காரணத்தினை கோரியபோது, நம்பிக்கை நிதியம் ‘பதிலளிக்க முடியாது’ என்று கூறிவிட்டது.
இந்நிலையில், ஜனாதிபதி நிதியத்தின்; பிரகாரம் 2021 ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொத்தர் சபையின் இலாபத்தில் நம்பிக்கை நிதியத்திற்குரிய இலாபப் பங்கு ஏறத்தள ஒரு பில்லியனை விட (1,305,156,751.50ரூபா) அதிகமாக இருந்தாலும் நிதிக் கூற்றுக்களில் அது 1,262,598,395 ரூபா எனக் குறிப்பிடப்பட்டிருந்தமையினால் சுமார் 42 மில்லியன் ரூபா (42,558,356ரூபா) குறைவாக கணக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தினால் அறிவிக்கப்பட்டிருந்ததன் பிரகாரம் 2020 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையிடமிருந்து கிடைக்க வேண்டிய நிலுவை இலாபப் பங்கு 262,149,615 ரூபாவாக இருந்தபோதும் நிதிக் கூற்றுக்களில் அத்தொகை 109,302,245 ரூபா எனக்குறிப்பிடப்பட்டு 152,847,370 ரூபா மறைக்கப்பட்டுள்ளது.
மீளாய்வாண்டுடன் தொடர்பாக நிலையான வைப்புக்களுக்கான வட்டி வருமானம் 296,318,766 ரூபாவாக இருந்போதிலும் நிதியத்தினால் நிதிக்கூற்றுக்களில் 287,876,625 ரூபாவாகக் குறிப்பிடப்பட்டு 8,442,141 ரூபா குறைவாக கணக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மஹபொல நம்பிக்கை நிதியத்திற்கு 985,500,070 ரூபா பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ள நெஷனல் வெல்த் கோப்பரேஷன் கம்பனி மற்றும் அதன் துணைக் கம்பனியான மத்திய வங்கியின் முதனிலை கொள்வனவாளராக நடவடிக்கை மேற்கொண்ட நெட்வெல்த் சிகியுரீட்டீஸ் கம்பனி தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமை காரணமாக அதனைக் கலைத்து விட வேண்டுமென 2020 நவம்பரில் அமைச்சரவை நிருபத்தின் ஊடாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி ஊழியர்களின் சேவையை முடிவுறுத்தி உரிய இழப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் கம்பனி சம்பந்தமாக நீதிமன்றங்களில் காணப்படும் வழக்குகள் மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஊழல் மற்றும் மோசடிகள் சம்பந்தமாக காணப்படும் முறைப்பாடுகள் முடிவுறுத்தப்படும் வரை கம்பனியை கலைப்பதனைத் தற்காலிகமாக நிறுத்துமாறு 2021 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற பொது முயற்சிகள் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அங்கு நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் மற்றும் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் கலைத்தல் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டது. அதற்கமைய கலைத்து விடுபவரை நியமிக்கும் அலுவல்கள் நிறுத்தப்பட்டது.
எனினும், நெஷனல் வெல்த் கோப்பரேஷன் கம்பனி மற்றும் நெட்வெல்த் சிகியுரீட்டீஸ் கம்பனி தொடர்பான தற்போதைய பெறுமதியைக் கணக்கிடுவதற்காக கணக்காய்வொன்று தனியார் நிறுவனமொன்றினூடாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதற்காக கட்டணமாக 3,769,451 ரூபாவும், சட்ட அலுவல்களுக்கான கட்டணமாக 1,744,249 ரூபாவும் மற்றும் கலைத்துவிடல் கட்டணமாக 60,000 ரூபாவும் அந்தக் கம்பனியினால் செலுத்த வேண்டியிருந்தாலும் அத் தொகைகள், மீளாய்வாண்டில் நம்பிக்கை நிதியத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிதியத்தினால் அத் தொகையை கிடைக்கப்பெற வேண்டிய தொகையாக கணக்கு வைத்திருந்தாலும் அந்தக் கம்பனிக்கணக்குகளில் செலுத்த வேண்டிய செலவொன்றாக கணக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை.
மஹபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதியம் குறித்து கவனம் செலுத்தியுள்ள அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறித்த நிதியத்தில் உள்ள கணக்கீட்டு குறைபாடுகள் பற்றி கலந்துரையாடி, கடந்த 2020 ஆண்டின் கணக்கீட்டு அறிக்கைகள் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கைகளின் படி மஹபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதியத்திற்கு முனைப்பழியுள்ள அபிப்ராயம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், மஹபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதியம் அதுதொடர்பில் தற்போது வரையில் வெளிப்படைத்தன்மையுடனான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. கட்டுரையாளரால் அதுபற்றி விபரங்கள் கோரப்பட்டபோதும், அவற்றை வெளியிடமுடியாதென்றும் தவறுகள் இடம்பெறவில்லை என்றுமே கூறப்பட்டுள்ளது.
அஹ்ஸன் அப்தர்
Leave a comment