By Keshayinie Edmund
மட்டக்களப்பில் அண்மையில் மின்தகனசாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகூடய நீளமுள்ள புகைபோக்கி குழாயினைக் கொண்ட மின் தகனசாலையென இது குறிப்பிடப்படுகின்றது. இவ் மின்தகனசாலையின் கட்டட நிர்மாணத்திற்கென செலவளிக்கப்பட்ட தொகையில் ஊழல் காணப்படுவதாகவும், இவ் மின்தகனசாலையை இயக்குவது தொடர்பில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இத்தகனசாலை தொடர்பான மேற்பார்வை பணிக்காக மாநகரசபை உறுப்பினர்கள் பணிக்கமர்த்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
2021 கொவிட் தொற்றுக்கள் பரவலாக காணப்பட்டதொரு காலப்பகுதியாகும். கொவிட் பரவலும் அதன் தாக்கங்களும் மக்களிடையே பாரியதொரு அதிர்வலையை உண்டாக்கியதினைப் போன்றே தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பிலும் பல முரணான கருத்துக்கள் பரவலாகியிருந்தன. கொவிட் தொற்றுக்குள்ளானவர்களை தகனம் செய்வது என்று முடிவாகிய போது எங்கு சென்று சடலங்களை எரிப்பது? என்கின்ற பிரச்சினை உருவாக ஆரம்பித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தகனம் செய்வதில் காணப்பட்ட சிக்கல்கள்
இக்காலப்பகுதியில் மட்டக்களப்பில் ஏறத்தாழ 200 பேரளவில் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தனர். இச்சடலங்களை தகனம் செய்ய வேண்டுமெனில் மட்டக்களப்பிலிருந்து பொலநறுவைக்கு இச்சடலங்களை கொண்டு சென்று தகனம் செய்ய வேண்டிய நிலை காணப்பட்டது. கிட்டத்தட்ட 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த இத்தகன சாலைக்கு சடலங்களை கொண்டு செல்வதில் பல்வேறுப்பட்ட சிரமங்கள் மற்றும் செலவீனங்கள் காணப்பட்டன.
பொலநறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி , பொதுசசுகாதார பரிசோதகர் ஆகியோரின் முன் அனுமதி பெறப்பட வேண்டிய நடைமுறை காணப்பட்டதுடன் மின் தகனத்தினை மேற்கொள்வதற்காக திம்புலாகலை பிரதேசசபையிடமிருந்தும் அனுமதி பெறப்படல் வேண்டும். இத்தகைய நடைமுறைகளுக்கு பின்னரே சடலங்கள் தகனம் செய்யப்பட்டன.
தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களது சடலங்களை கொண்டு செல்வதற்கு என தனியொரு வாகனமும் வைத்திய ஊழியர்களை ஏற்றிச் செல்வதெற்கென வேறொரு வாகனமும் தேவைப்பட்டன. அத்துடன் இக்காலப்பகுதியில் சுகாதார பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டும் ஏற்பட்டிருந்த பாதிப்பக்களாலும் சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறையும் காணப்பட்டதனால வைத்திய ஆளணியையும் ஊழியர்களையும் அனுப்பி வைப்பதிலும் சிக்கல்கள் காணப்பட்டன.
இந்நடைமுறைகள் மற்றும் சுகாதார பிரச்சினைகளினால் ஏற்பட்ட தாமதங்களினால் பிரேதங்களைக் முறையில் பேணுவதற்கும் பிரேத அறை வசதிகள் மற்றும் பற்றாக்குறை காணப்பட்டன.
வைத்திய பணிப்பாளரின் வேண்டுகோள்
மேற்கூறிய நிலைமைகளை கருத்தில் கொண்டும் இதனால் ஏற்பட்ட தேவை கருதியும் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சினி மட்டக்களப்பில் மின் தகனசாலை அமைப்பதன் கட்டாயத்தினை வலியுறுத்தி மாநகரசபை முதல்வருக்கு கோரிக்கை கடிதமொன்றினை 2021 செப்டெம்பர் மாதமளவில் முன்வைத்தார். இதில் சடலங்களை மட்டக்களப்பிலிருந்து நீண்ட தூரம் கொண்டு செல்வதில் காணப்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.
மின்தகனசாலையின் ஆரம்பித்தல் செயற்பாடுகள்
பல்வேறுப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் நடைமுறைகளின் பின்னர் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அங்கீகாரத்துடன் இலங்கையிலுள்ள ஏனைய மின்தகன சாலைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் நீளமுள்ளதான 80 மீற்றர் அளவுள்ள புகை சீராக்கி கொண்டதான இம்மின்தகனசாலை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் அமைக்கப்பட்டது.
2023 மார்ச் மாதமளவில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ந.மணிவண்ணனால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இப்பணிகளை நிறைவு செய்வதற்காக 40 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோக பூர்வமான தகவல்கள்
மின்தகனசாலை அமைப்பதற்கான நிதி மற்றும் ஏனைய தகவல்கள் தொடர்பாக தகவலறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக வினவப்பட்டது. ஆயினும் சில குறிப்பிட்ட சில வினாக்களுக்கு மட்டும் பதில்கள் அளிக்கப்பட்டுள்ள போதும் முழுமையான பதில்கள வழங்கப்பட்டிருக்கவில்லை.
அதற்கமைவாக, மின்தகனசாலையை அமைக்கும் போதான வரவு-செலவு தகவல்கள் மற்றும் இதனை மேற்கொண்ட ஒப்பந்தகாரர் அல்லது நிறுவனம் குறித்த விபரங்கள தொடர்பில் வினவப்பட்டபோது, ஒப்பந்தகாரரின் பெயர் :Vijai Construction UCompiy என்றம் அது NO:1301\ திருமலை வீதி, மட்டக்களப்பு என்ற முகவரியைக் கொண்டதெனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மின்தகனசாலைக்கான மேற்பார்வைக்கு (inspection) மாநகர உறுப்பினர்கள் பணிக்கமர்த்தப்பட்டனரா? ஏன்? இவர்களது தகுதி என்ன? மற்றும் இவர்களது கட்சி விபரங்கள்? என்று எழுப்பபட்ட கேள்விகளுக்கு மாநகரசபை உறுப்பினர்கள் பணிக்கமர்த்தப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வினவப்பட்ட வினாக்களுக்கு அமைவாக உரிய பதில்கள் வழங்கப்படாமையானது, திட்டமிட்ட வகையில் விபரங்கள் மறைக்கப்படுகின்றவா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில், 42.33 மில்லியன் ரூபா தொகையானது இந்த தகனசாலைக்காக செலவளிக்கப்பட்டுள்ளதாக தகவலறியும் உரிமைச்சட்டத்தில் ஊடாக வினவப்பட்ட போது கூறப்படுகின்றது.
மேலும், குறித்த தகனசாலைக்கு அத்தொகை அதிகமானது என்றும், குறித்த தகன சாலைiயை அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமானப்பொருட்களின் தரம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத துறைசார் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதேநேரம், குறித்த தகனசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் எவ்விதமான விடயங்களையும் வழங்க முடியாது என்று குறிப்படும் அதிகாரிகள், அவற்றை வெளிப்படுத்தப்பட்டால் ஏற்கனவே சில அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டு பழிவாங்கப்பட்ட நிலையில் தாமும் அந்நிலைக்கு உள்ளாகிவிடுவோம் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஆகவே, இந்த தகனசாலையில் மக்களுக்கு அவசியமானதாகக் காணப்படுகின்றபோதும், குறித்த தகன சாலையை நிர்மாணிப்பதற்கு செலவு செய்யப்பட்ட தொகை தொடர்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என்பது மக்களிடத்திலிருந்து வெளிப்பட்டுள்ள கோரிக்கையாக அமைகின்றது.
Leave a comment