Bribery

KPMG லிட்ரோவுக்கு வழங்கிய கணக்காய்வு மறுப்பு: அரசாங்க கணக்காய்வு அதிபரிடம் கையளிப்பு

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் லிட்ரோ காஸ் லங்கா லிமிடட் மற்றும் லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவேட் லிமிடட் ஆகிய கம்பனிகள் அரசியலமைப்பு மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிவிப்பைப் புறக்கணித்து தனியார் நிறுவனத்தின் ஊடாக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) கவனத்தில் எடுத்துக்கொண்டதன் விளைவாக தற்போது தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் அரசியலமைப்புக்கு முரணாக தனியார் கணக்காய்வு நிறுவனம் ஒன்றின் ஊடாக லிட்ரோ காஸ் நிறுவனங்கள் மேற்கொண்ட கணக்காய்வு அறிக்கைகளை செல்லுபடியற்றதாக பிரகடனம் செய்து அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கூட்டுத்தாபன சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ளது. இது 2003 இல் தனியார்மயமாக்கப்பட்டு பின்னர் 2009 இல் மீண்டும் அரசுடைமையாக்கப்பட்டது. கணக்காய்வாளர் தலைமையதிபதியின் நியதிச்சட்ட முறையில் லிட்ரோ காஸ் நிறுவனங்களை கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளதுடன் அதுதொடர்பான விசாரணைகள் கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த இரு நிறுவனங்கள் தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கணக்காய்வாளர் நாயகத்துக்கு எவ்வித தடையும் இல்லையென சட்டமா அதிபர் ஊடாக ஆலோசனை பெறப்பட்டிருக்கிறது.

இந்த நிலைப்பாடு கணக்காய்வாளர் நாயகத்தினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு KPMG என்ற தனியார் நிறுவனத்தின் ஊடாக கணக்காய்வு நடவடிக்கைகளை குறித்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. KPMG எனப்படுவது 144 நாடுகளில் செயற்படும் ஒரு சர்வதேச கணக்காய்வு நிறுவனம் ஆகும்.

இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித்த ஹேரத்திடம் நாங்கள் வினவியபோது லிட்ரோ நிறுவனங்களின் பிரதிநிதிகளை மீண்டும் விசாரணைக்கு அழைத்ததாக தெரிவித்தார். KPMG நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கைகளை நிராகரிப்பதுடன் அவர்களை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கீழ் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையில் தற்போது லிட்ரோ நிறுவனங்கள் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக கணக்காய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“லிட்ரோ காஸ் கம்பனியாது தேசிய கணக்காய்வு அலுவலகமான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வை நிராகரித்ததன் மூலமும் பொறுப்பு முயற்சி ஒன்றிற்காக பாராளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன் ஆஜராக நிராகரித்ததாலுமே இந்த பிரச்சினைகள் ஆரம்பித்தன,” என தெரிவித்தார்.  இது தொடர்பில் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் தலையீட்டுடன் அரசாங்க பொறுப்பு முயற்சிகளில் பொதுவாக எழுகின்ற உரிமை தொடர்பான பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற முடிந்தது என்றும் அந்த விடயம் அரசாங்க பொறுப்பு முயற்சிகளில் இது தொடர்பில் முக்கியமான முன்னுதாரணம் ஒன்றாக முன்மொழிவு செய்யப்பட்டதால்தான் கோப் விசேட அறிக்கை முன்வைக்க தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தினை அடுத்து கணக்காய்வாளர் தலைமையதிபதியின் கணக்காய்வுக்கு உட்பட்டது. இவ்வாறு கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேளையில் 2020 ஆண்டில் லிட்ரோ நிறுவனங்கள் 20 ஆவது திருத்தச் சட்டத்தினி கீழ் தனியார் கண்ணகாய்வாளர் ஒருவரை நியமிப்பது என்பது சட்டத்திற்கு முரணானது என்பதை சட்டமா அதிபர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் சிங்களப் பிரதியில் ‘கம்பனிகளுக்கு சொந்தமான கம்பனிகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்துடன் இதன் ஆங்கில்பிரதியில் ‘கூட்டுத்தாபனங்ககு சொந்தமான கம்பனிகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் சிங்களப்பிரதியில் ‘கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமாக கம்பனிகள்’ என திருத்தப்பட்டிருந்தாலும் அதனை பொருள்கோடல் செய்த சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே மேற்சொன்ன விடயம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

அந்த அடிப்படையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவாக லிட்ரோ நிறுவனம் தனியார் கணக்காய்வாளர் ஒருவரை நாட முடியாது. அரசியலமைப்புக்கான 20 ஆவது சீர்திருத்தத்தின் சிங்களப் பிரதியில் கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான கம்பெனிகள் என எழுதப்பட்டிருந்தாலும் அதனை பொருள்கோடல் செய்த சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்நிறுவனங்களை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக கணக்காய்வுக்கு உட்படுத்த முடியும் என புரிந்துகொள்ள முடிகின்றது. தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தேசிய கணக்காய்வு நிறுவனம் லிட்ரோ காஸ் நிறுவனங்களில் கணக்காய்வு மேற்கொண்டு வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்துரை வினவப்பட்டபோது மேற்படி லிட்ரோ நிறுவனங்களின் கணக்காய்வை மேற்கொள்வதற்கு தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு தடைகள் கிடையாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மேற்சொன்ன விடயங்கள் தொடர்பில் திறைசேரியின் செயலாளர் இலங்கை காபப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லிட்ரோ நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ  நிறுவனங்களின்  வருடாந்த அறிக்கைகள் குறித்த திகதியில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் அரசாங்க பொறுப்பு முயற்சிகளுக்கான பிரதம நிர்வாக அலுவலக அதிகாரியின் ஊடாக குறித்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்திடம் இது தொடர்பாக நாம் வினவியபோது இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வு நடவடிக்கைகள் கணக்காய்வாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதையும் அதில் 99.94 வீத உரிமையைக் கொண்ட லிட்ரோ காஸ் லங்கா லிமிடட் மற்றும் 100 வீத உரிமையைக் கொண்ட லிட்ரோ டேர்மினல் லங்கா லிமிடட் ஆகிய நிறுவனங்கள் மாத்திரம் தனியார் நிறுவனங்களினால் கணக்காய்வுகளை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதை அடையாளப்படுத்தியது.

இந்நிலையில் அரசாங்கம் சார்பில் தங்கள் நிறுவனத்தை கணக்காய்வு மேற்கொள்ளத் தேவையில்லை என்று லிட்ரோ காஸ் நிறுவனம் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பணிப்பாளர் சபையின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் ஊடாக கணக்காய்வை மேற்கொள்வதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை  என லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

தனியார் கணக்காய்வு நிறுவனம் மூலம் சிறந்த முறையில் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவிக்கின்ற போதிலும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லிட்ரோ நிறுவனம் என்பவற்றிற்கு நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு அபிப்பிராயம் வழங்கும்போது முணைப்பழியுள்ள அபிப்ராயமே (Unqualified Opinion) 2018 தொடக்கம் 2020 வரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தற்போதைய கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்பாக அறிந்துகொள்ள நாம் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது கம்பனியின் கணக்காய்வு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதால் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார்கள்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய கணக்காய்வு  அலுவலகம் ”அரசாங்கத்திற்கு 50 சதவீதம் பகிர்வு உள்ள கம்பனிகள் தனியார் கணக்காய்வு நிறுவனங்கள் மூலம் கணக்காய்வுகளை மேற்கொள்ள முடியாது. அந்த அடிப்படையில் லிட்ரோ காஸ் நிறுவனங்களை கணக்காய்வு மேற்கொள்ளும் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கே உள்ளது. அரசியலமைப்பு மற்றும் சிங்களப் பிரதி மற்றும் ஆங்கிலப்பிரதிகளில் சிறியதொரு முரண்பாடு காரணமாக குறித்த கோரிக்கைகள் சுமார் இரண்டு வருடங்கள் நிலுவையில் இருந்தன. தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி லிட்ரோ காஸ் நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை தேசிய கணக்காய்வு அலுவலகம் மேற்கொள்கின்றது” என தெரிவித்தது.

அத்துடன் 2017 மற்றும் 2018 நிதி ஆண்டுகளில் லிட்ரோ நிறுவனங்களின் கணக்காய்வு தொடர்பான நிதி அறிக்கைகளை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளருக்கு சட்டமா அதிபர் ஊடாக வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளர் வேண்டியுள்ளார். அரசாங்கம் மற்றும் தனியார் கணக்காய்வு நிறுவனங்களினாலும் சமர்பிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சட்டமா அதிபர் வழங்கும் பதிலை பிரதம கணக்கீட்டு அலுவலர் ஊடாக கம்பனிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு குழு வலியுறுத்தப்பட்டது.

மேற்குறித்த கணக்காய்வு நடவடிக்கைகளை ஆராயும்போது லிட்ரோ நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 பேர் மாத்திரமே என்பதும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. சட்டப்படி 5 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது தெரியவந்தது. மேலும் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களை நிதி அமைச்சு நியமிப்பதால் கூட்டுறவுக் குழுவானது தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இயக்குநர்கள் குழுவை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியது. மேலும் கூட்டுறவுத் தலைவர் நிதி அமைச்சின் செயலாளரை பரிந்துரைத்தார்.

அஹ்ஸன் அப்தர்

Written by
Ahsan Afthar

Ahsan Afthar has been working in the media industry for the past four years. He has worked as a full-time journalist in the national newspaper 'Vidivelli' and is currently writing as a freelance journalist for the same newspaper. Specializing in reporting on SRHR, he is the Editor-in-Chief of the Tamil language section of the website bakamoono.lk. He is also the Content Lead of Nadi, a digital media outlet. He completed communication and media studies at the University of Colombo and is an Undergraduate at the Open University of Sri Lanka. As a United Creatives Scholar of UNDP Sri Lanka, he has worked with UNDP on investigative reporting and social media campaigns on violence against women and gender-based violence. Apart from this, he also dabbles in investigative reporting along with reporting on Mobile Journalism, Gender reporting, Fake news and Hate speech.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Bribery

X-Press Pearl කරපු විනාශය සම්බන්ධයෙන් TISL සහ CEJ නැවත ශ්‍රේෂ්ඨාධිකරණයට.

එක්ප්‍රස් පර්ල් නෞකාව මෙරට මුහුදු සීමාවේදී ගිනි ගෙන මුහුදු බත්වීමේ සිද්ධිය හා...

Bribery

200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே?

200மில்லியன் ரூபாவுக்கும்அதிகமான நிதி எங்கே? ‘மஹபொல நம்பிக்கை நிதியம் மௌனம்: பொருளாதார நெருக்கடியால் மஹாபொல ஊக்கத்தொகை...

Bribery

அசமந்தத்தால் வருமானத்தை இழந்தது வவுனியா நகரசபை : நிலுவைத்தொகை கோடிகளை தாண்டியது

பாலநாதன் சதீஸ் வவுனியா நகரசபையினர் சரியான முறையில் சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்து அதன் பெறுமதி...

Bribery

உள்ளூராட்சி மன்ற தேர்தலும் பெண்களது வகிபாகமும்

கேஷாயினி  இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் பெண்களது வகிபாகமானது உலகளாவிய ரீதியில் ஒப்பீட்டளவில் ஓரளவாக காணப்படுகின்ற போதிலும்,...